திருவனந்தபுரம், பிப். 20-
கேரள மாநிலம் கொல்லம் கடலில் கடந்த 15-ந் தேதி குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆழ்கடல் பகுதியில் சென்ற இத்தாலி நாட்டின் எண்ணை கப்பலான என்ரிகா எலக்சியில்” இருந்த பாதுகாவலர்கள் 2 பேர் மீன்பிடிபடகில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பூத்துறை மீனவர் அஜிஸ்பிங்கு மற்றும் ஜெலஸ்டின் ஆகிய இருவரும் குண்டுபாய்ந்து இறந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று நடுக்கடலில் சென்ற எண்ணை கப்பலை மடக்கி பிடித்து கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும் அதில் இருந்த 10 இந்தியர்கள் உள்பட 24 மாலுமிகளும் கொச்சி துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து கேரள போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சந்திரசேகர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் இத்தாலி மாலுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கு மாலுமிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் நடந்ததாகவும் எனவே சர்வதேச விசாரணைக்கும், இத்தாலி நீதித்துறைக்கும் மட்டுமே ஒத்துழைக்க முடியும். இங்கு நடக்கும் விசாரணையை ஏற்கமாட்டோம் என்று கூறினர்.
இதுபற்றி கேரள போலீஸ் அதிகாரிகள் மாநில உள்துறையினருக்கும், மத்திய வெளியுறவுத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் டெலிபோனில் பேசினார்.
அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா இந்திய மீனவர்களின் படகில் வெடிமருந்துகளோ, துப்பாக்கியோ இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த நிலையில் இத்தாலி மாலுமிகள் இங்கு நடக்கும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், மீனவர்களை சுட்டவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் நிர்பந்தத்தை தொடர்ந்து நேற்று இத்தாலி மாலுமிகள் விசாரணைக்கு ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் கொச்சி போலீஸ் கமிஷனர் அஜிஸ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சாம்கிறிஸ்டி டேனியல் ஆகியோர் 8 மணி நேர விசாரணை நடத்தினர். அவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர்.
தொடர்ந்து குமரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இத்தாலி கப்பலின் 2 பாதுகாவலர்கள் லுஸ்டோரா, சால்வாரோ ஆகியோரை கப்பல் கேப்டன் லும்பர்டோ கேரள போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்களை கைது செய்த போலீசார் இத்தாலி கப்பலில் இருந்து அவர்களை கொச்சி வெலிங்டன் தீவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விருந்தினர் மாளிகைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் சம்பவம் குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
இன்று காலையிலும் விசாரணை நீடித்தது. அதன் பின்பு அவர்கள் கொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து பேச்சு நடத்த இத்தாலி நாட்டின் சட்டம் மற்றும் வெளியுறவுத்துறையின் அதிகாரிகள் குழு ஒன்று இந்தியாவுக்கு வந்தது. மேலும் இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி கியூலியோ டெர்சி வருகிற 28-ந் தேதி இந்தியா வருவார் என் எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.