Recommendations
Recent Activity
கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: போராட்டக்குழுவினருடன், மாநில நிபுணர்குழு இன்று பேச்சுவார்த்தை
நெல்லை, பிப்.19-
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அணுஉலை பணிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை பராமரிப்பு பணிகளைத்தவிர அனைத்து பணிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
 
அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டம் தொடர்வதால் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகவே அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்தியஅரசு நிபுணர்குழுவை அமைத்து போராட்டக்குழுவினர் அடங்கிய மாநில குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 4முறை பேச்சு வார்த்தை நடத்தியும், போராட்டக்குழுவினருடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
 
இதைத்தொடர்ந்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள். இந்நலையில் அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழகஅரசு 4பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழுவில் அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய போராசிரியர் இனியன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
நேற்றுகாலை நெல்லை வந்த    அவர்கள், முதலில் மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்பு அவர்கள் ஆய்வு நடத்துவதற்காக மாலை5மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு சென்றனர். அவர்களுக்கு,  கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து விளக்கமளிக்க வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி மற்றும் விஞ்ஞானிகள் 5பேர் மட்டும் உடன் சென்றனர். இதற்காக அவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றிருந்தார்கள்.
 
மின் உற்பத்திக்கு தயாராக உள்ள அணுஉலைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக அரசின் நிபுணர் குழுவினர் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.  அவர்களின் கேள்விகளுக்கு கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் காசிநாத்பாலாஜி மற்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தார்கள்.
 
அணுமின்நிலையத்தில் தமிழக அரசின் நிபுணர் குழுவினர் இரவு 9மணிவரை 4மணிநேரம் ஆய்வு நடத்தினார்கள். பின்பு அவர்கள் நெல்லை வந்தனர். இந்நிலையில் தமிழகஅரசின் நிபுணர்குழுவினர், மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நேற்று நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஆலோசனை செய்கின்றனர். மதியம் 2மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதில் போராட்டக்குழு சார்பில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், வக்கீல் சிவசுப்பிரமணியன்,  ராஜலிங்கம், கிஷோர், நாதன், ராயப்பன் உள்பட 12பேர் கலந்து கொள்கிறார்கள்.
 
முன்னதாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் போராட்டக்குழுவினர், தங்களது குழுவினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.