Recommendations
Recent Activity
மதுரையில் இன்று ஜாமீனில் வந்த கைதி வெட்டிக்கொலை: போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பியபோது பயங்கரம்
மதுரை, பிப். 8-

ஜாமீனில் வந்த கைதி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பியபோது சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மதுரையில் இன்று பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை பாக்கியநாத புரத்தை சேர்ந்தவர் நாகு என்ற நாகேந்திரன் (வயது32). இவரை போலீசார் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த வாரம் அந்த வழக்கில் நாகேந்திரனுக்கு ஜாமீன் கிடைத்தது. அதாவது செல்லூர் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை யின்பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் செல்லூர் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். வழக்கம்போல இன்று காலையும் நாகேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்று செல்லூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு விட்டு பாக்கியநாதபுரத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு அருகே ஒரு திருப்பத் தில் அவர் திரும்பும்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் திடீரென மோட்டார் சைக்கிளை கீழே தள்ளியது. நாகேந்திரன் சுதாகரித்து எழுந்திருக்க முயற்சி செய்வதற்குள் அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தி கொலை செய்து விட்டும் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

எப்போதும் ஜனநடமாட்டம் நிறைந்த அந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. தகவல் கிடைத்த தும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்கு பழிவாங்கும் வகையில் நாகேந்திரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.