ஏனாம் கலவரம்: அமைச்சர்கள் அறிக்கை ரங்கசாமியிடம் தாக்கல்
Pondichery
புதன்கிழமை,
பெப்ரவரி 08,
5:34 PM IST
0
கருத்துக்கள்
புதுச்சேரி, பிப். 8-
ஏனாமில் ரீஜென்சி செராமிக் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 2 பேர் பலியானார்கள். தொழிற்சாலை சூறையாடப்பட்டது. துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கலவரம் நடந்த பகுதிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன் ஆகியோர் சென்றனர். காயமடைந்த தொழிலாளர்கள், மற்றும் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்தனர். ஆய்வு அறிக்கையை முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் அவர்கள் தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து அமைச்சர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏனாம் கலவரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம். கலவரத்தில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்து அறிவிப்பார்.
புதுவையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. விவசாய பகுதிகளில் 50 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள பகுதிகளில் நெல் அறுவடை நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு மின்கம்பங்கள் நடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிருநாளில் மின் சாதனங்கள் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏனாம் கலவரம் தொடர்பான சி.டி.யை புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு இன்று மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. போட்டு காண்பித்தார். கலவரம் குறித்து அவர்களிடம் விளக்கி கூறினார்.
0
கருத்துக்கள்