நெல்லை, பிப். 8-
சங்கரன்கோவிலில் இரு தரப்பினர்களுக்கிடையே நடந்த மோதல் தொடர்பாக நெல்லையில் உள்ள மேலப்பாளையம், பேட்டை, தாழையூத்து ஆகிய 3 இடங்களில் நேற்று நள்ளிரவு மறியல் போராட்டம் நடந்தது.
மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ரசூல்மைதீன் தலைமையில் சந்தை முக்கில் திடீர் மறியல் போராட்டம் நடந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்து போக்கு வரத்தை சீர் செய்தனர்.
இது போல பேட்டை ரொட்டிக்கடை பஜார் முன்பு மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜெய்லானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாழையூத்து பஜாரிலும் மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஜெயபாலன் மேற்பார்வையில் மேலப்பாளையம், பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள பள்ளி வாசல்கள், மசூதிகளிலும், முக்கிய இந்து கோவில்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலப்பாளையம் பேட்டை பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.