ஆரல்வாய்மொழி,
பிப். 8-
ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 55) டெய்லர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை ஆரோக்கியம் முத்து நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கேரளாவை சேர்ந்த கார் ஆரோக்கியம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
உடனே காரை நிறுத்தி அவரை காருக்குள் தூக்கி போட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஆரோக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த கேரள கார் டிரைவர் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு மாயமானார்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய கார் டிரைவரை தேடிவருகிறார்கள்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோட்டை சேர்ந்தவர் ராஜன் (வயது 47). மீன் வியாபாரி. சம்பவத்தன்று இவர் பாகோட்டில் மீன் வியாபாரத்தை முடித்து விட்டு அங்கிருந்து ஒரு மினி பஸ்சில் ஏறி ஊருக்கு சென்றார்.
அப்போது எதிர் பாராத விதமாக பஸ்சின் படிகட்டு வழியே தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜன் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.