பெங்களூர், பிப்.8-
சட்டசபையில் மந்திரிகள் ஆபாசபடம் பார்த்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. நீக்கப்பட்ட 3 மந்திரிகளுமே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். சட்டசபையில் மந்திரி லட்சுமண் சவதிதான் செல்போனில் ஆபாச படம் பார்த்தார். அதை அருகில் இருந்த மந்திரி சி.சி.பட்டீல் எட்டிப் பார்த்தார். இருவரும் ரசித்து பார்த்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனால் இவர்கள் இருவரும்தான் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதில் 3-வதாக மந்திரி கிருஷ்ணபால்மர் ஈடுபட்டிருக்கிறார். அவர் நீக்கப்பட்டு ராஜினாமா செய்த பின்புதான் இந்த விவரம் தெரியவந்தது. கிருஷ்ணபால்மர்தான் உடுப்பி அருகே தீவுத் திருவிழாவில் நடந்த வெளிநாட்டு பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய கிளிப்பிங்ஸ்களை லட்சுமண் சவதி செல்போனுககு அனுப்பி வைத்தவர் என்று தெரியவந்தது.
முதல்-மந்திரி கூட்டிய கூட்டத்தில் மந்திரி லட்சுமண் சவதியே அவரை காட்டிக் கொடுத்து விட்டார். இதனால் கிருஷ்ணபால்மர் மந்திரி பதவி இழந்தார். பதவி பறிபோனதால் ஆவேசம் அடைந்தார். அவர் கூறியதாவது:-
நான் இந்த ஆபாச காட்சிகளை சவதிக்கு அனுப்ப வில்லை. விசாரணைக்கு உத்தரவிட்டால் உண்மை தெரியவரும். எனக்கு இதுபோன்று ஆபாச காட்சிகள் பார்க்கும் வழக்கம் கிடையாது. என் மீது பழி சுமத்தப்பட்டதால் நானே முன்வந்து ராஜினாமா செய்து விட்டேன்.
இவ்வாறு கிருஷ்ண பால்மர் கூறினார்.
இதேபோல் நீக்கப்பட்ட மற்றொரு மந்திரி சி.சி.பட்டீல் கூறுகையில், சட்டசபையில் லட்சுமண் சவதி ஆபாச படம் பார்த்தபோது அருகில் இருந்த நான் அவரை சுவிட்ச் ஆப் செய்யுமாறு கூறினேன். ஆனால் நானும் பார்ப்பதாக மீடியாக்கள் காட்டின என்றார்.
செல்போனை கையில் வைத்து ஆபாச படம் பார்த்த லட்சுமண் சவதி கூறுகையில், நான் ஆபாச படம் பார்க்கவில்லை. உடுப்பி தீவுத்திருவிழாவில் வெளிநாட்டு பெண்களின் நடன நிகழ்ச்சிகளைத்தான் பார்த்தேன் என்றார்.