Recommendations
Recent Activity
வேலை வாங்கி தருவதாக ரூ.2 1/2 லட்சம் மோசடி: சென்னை அதிகாரி கடத்தி சிறைவைப்பு- கல்லூரி மாணவர்கள் ஆத்திரம்
சென்னை, பிப்.8-

நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் சாலையில் 'ஈகிள் செக்யூரிட்டி சர்வீஸ்' என்ற பெயரில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மார்க் கெட்டிங் மானேஜராக இருப்பவர் முரளீதரன் (38). இவரது குடும்பம் கோவையில் உள்ளது. சென்னை அண்ணாநகரில் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பர் முருகன். பிரபல நகை கடையில் பணிபுரிந்த இவருக்கு தற்போது வேலை இல்லை.

இதை தெரிந்து கொண்ட முரளீதரன் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முருகனிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் முருகனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் 6-ந்தேதி காலை 11 மணி அளவில் தனியார் நிறுவன அதிகாரி முரளீதரன், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற சிலர் அவரை வழிமறித்தனர். முரளீதரனுக்கும், அங்கு நின்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. திடீர் என்று அவர்கள் உருட்டுக் கட்டையால் முரளீதரனை தாக்கினார்கள்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்துக்குள் அவரை ஒரு காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். இந்த சம்பவத்தை சிறிது தூரத்தில் நின்று கவனித்த மருந்துக்கடை ஊழியர்கள் அங்கு செல்வதற்குள் கார் மாயம் ஆகிவிட்டது. முரளீதரன் கடத்தப்பட்ட இடத்தில் அவரது அடையாள அட்டை கிடந்தது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் முரளீதரன் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், முரளீதரனுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு இருக்கிறது. இதனால் அவர் ஊருக்கு போகவில்லை. எனவே அவரை சமாதானம் செய்வதற்காக அவரை வற்புறுத்தி ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம். எனவே தேடவேண்டாம் என்று கூறினார். இதில் உஷார் அடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் பகுதியில் இருந்து ஒருவர் செல்போனில் பேசியது தெரியவந்தது. கடத்தப்பட்ட அதிகாரி முரளீதரனை மீட்பதற்காக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை கொண்ட சிறப்பு படை அமைக்கப்பட்டது. செல்போன் மூலம் அதிகாரியை கடத்தியவர்களை கண்டுபிடித்தனர். முரளீதரனிடம் ரூ.2 1/2 லட்சம் கொடுத்து ஏமாந்த முருகன் 4 பேருடன் வந்து முரளீதரனை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மளிகம்பட்டு கிராமத்தில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளீதரனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கடத்தலில் முருகனுடன் அவரது தம்பி ராஜேஷ், கல்லூரி மாணவர்கள் சரவணன், சண்முகம், மற்றொரு சரவணன் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. பணத்தை மோசடி செய்ததால் முரளீதரன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. வீட்டில் சிறைவைக்கப்பட்ட முரளீதரனை, இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். அவரது கையை கட்டி வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பணம் தராவிட்டால் வீடு திரும்ப முடியாது. யாரிடமாவது சொல்லி பணத்தை கொண்டு வர ஏற்பாடு செய். இல்லை என்றால் மண்எண்ணை ஊற்றி கொளுத்தி விடுவோம். போலீஸ் இங்கே வரமுடியாது என்றும் மிரட்டி உள்ளனர்.

ஆனால் போலீசார் துப்பு துலக்கி அங்கு சென்றுவிட்டனர். அவர்களை கண்டதும் முருகன் உள்பட 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். மீட்கப்பட்ட முரளீதரனிடம் சம்பவம் குறித்து போலீசார் கேட்டு அறிந்தனர். தப்பி ஓடிய முருகனின் தந்தை சந்திரசேகரை போலீசார் பிடித்து வந்து விசாரித்து வருகிறார்கள். கடத்தல் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் முரளீதரனை பாதுகாப்பாக மீட்டு வரவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் அதிகாரி முரளீதரன் பத்திரமாக மீட்கப்பட்டார். அதன்பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தன்னிடம் இருந்த 'லேப் டாப்', ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கடத்தியவர்கள் பறித்துக்கொண்டதாக மீட்கப்பட்ட முரளீதரன் போலீசில் தெரிவித்துள்ளார். மனைவியுடன் சமாதானம் செய்ய அழைத்துச் செல்வதாக அலுவலகத்துக்கு போன் செய்யும்படி முரளீதரன் சொன்னதை கேட்டு செல்போனில் முருகன் பேசியுள்ளார். போன் வந்த இடத்தை வைத்து முரளீதரன் அடைத்து வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய வாடகை கார் டிரைவரும் வழக்கில் சேர்க்கப்படுகிறார். கடத்தல்காரர்கள் சில தினங்களில் பிடிபடுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.