சென்னை, பிப். 8-
வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் சற்குணபாண்டியன், டி.கே. எஸ்.இளங்கோவன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் சங்கரிநாராயணன், பி.கே.சேகர்பாபு, செங்கை சிவம், இளைஞர் அணி நிர்வாகிகள் சுகவனம் எம்.பி., சேலம் ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், வக்கீல் அசன்முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. பொருளாளரும், இளைஞரணி தலைவரு மான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினார். முன்னதாக அவர் பேசியதாவது:-
இளைஞர் அணியில் இன்றைய இளைஞர்களுக்கு பல பொறுப்புகள் காத்து இருக்கிறது. இங்கு வந்திருக்கும் இளைஞர்கள் பொறுப்பு கிடைக்கவில்லை என்று ஏமாற்றம் அடைய வேண்டாம். தி.மு.க.வில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் அதிக சிறப்பும், முதன்மையாகவும் திகழ்கிறது.
இளைஞர் அணி 1980-ம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது. இது வரை பகுதிக்கு ஒரு அமைப் பாளரும், 2 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இனி ஒரு அமைப்பாளர், 4 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
கடந்த தேர்தலில் கட்சி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் ஒன்றை மறக்க முடியாது. தி.மு.க.விற்கு இளைஞர்களும், மாணவர்களும் ஆதரவு அளிக்காதது ஒரு முக்கிய காரணமாகும். இளைஞர்களிடத்தில் உணர்வு குறைந்து கொண்டே இருக்கிறது. இன்றைய தொழில்நுட்ப மாற்றத்தின் காரணத்தினால் இன உணர்வு மாறி விட்டது.
கலாசார மாற்றம் ஏற்பட்டாலும் அண்ணா, பெரியாரின் லட்சியத்தை இன உணர்வை என்றும் மறக்க கூடாது. இளைஞர் அணியில் இளைஞர்கள்தான் இருக்க வேண்டும். ஒருவரே பொறுப்பில் இருக்கும் நிலை மாற வேண்டும். அந்த நிலையை கொண்டு வரத்தான் 30-வயது வரை உள்ளவர்கள் மட்டும்தான் இளைஞரணியில் இருக்க முடியும். அவர்களால் தான் ஒழுங்காக வழி நடத்த முடியும்.
வடசென்னை மாவட்ட இளைஞர் அணி பொறுப்புகளுக்கு ஏற்கனவே 300 பேர் மனு கொடுத்துள்ளனர். இன்று 250 பேர் விருப்ப மனு தந்து இருக்கிறார்கள். இளைஞரணி நியமனத்தில் எந்த பரிந்துரைகளும், சிபாரிசும் கிடையாது. மதிப் பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு மாணவரணி, தொண்டரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட மற்ற அணிகளில் பொறுப்புகள் வழங்கப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் ஆகியோர் ஒப்புதலுடன் 5 நாட்களில் அறிவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.