Recommendations
Recent Activity
சட்டசபையில் கை நீட்டி பேசுவதற்கு சினிமா ஸ்டூடியோ அல்ல: விஜயகாந்த் மீது ராமதாஸ் தாக்கு
காஞ்சீபுரம், பிப். 8-
 
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியல், புதிய நம்பிக்கை கொள்கை செயல் திட்டத்திற்கான கருத்துக் கேட்பு வரைவு வெளியீட்டு நிகழ்ச்சி காஞ்சீபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று, கருத்து கேட்பு வரைவை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-  
 
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சீரழிந்து வரும் தமிழகத்தை மீட்பதற்காகத் தான் புதிய அரசியல்... புதிய நம்பிக்கை என்ற தலைப்பிலான கொள்கை செயல் திட்டத்தை நாங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான செயல் திட்டங்களை இந்த ஆவணத்தில் நாங்கள் முன் வைத்திருக்கிறோம்.
 
தமிழகத்தில் உள்ள திராவிடக்கட்சிகள் திரைப்படம், மது, இலவசம் ஆகியவற்றின் மூலம் மக்களை மயக்கி அவர்களின் மூளையை மழுங்கடித்து விட்டன. திரா விடக்கட்சிகளின் ஆட்சியில் இருந்து மக்களை மீட்பது எவ்வளவு முக்கியமோ அதை விட இந்த 3 தீமைகளில் இருந்து மக்களை மீட்பது முக்கியமாகும்.   மதுவை ஏழை மக்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் அவர்களின் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் அரசே சுரண்டும் அவலம் தமிழ்நாட்டை தவிர உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை.
 
ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இலவசங்களை வழங்கும் ஆட்சியாளர்கள் அதற்கான நிதியை திரட்டுவதற்காக ஏழை மக்களுக்கு மதுவை விற்கிறார்கள். இதுவும் ஒருவகை சுரண்டல்தான். மது விற்பனையால் அரசுக்கு நடப்பாண்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது அரசுக்கு லாபம்தான் என்றாலும், இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.  
 
இந்தியாவில் 2003-04 ஆம் ஆண்டில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தீமைகளை சமாளிக்க அரசுகளுக்கு தேவைப்பட்ட நிதி ரூ.24,000 கோடியாக இருந்ததாகவும் ஆனால் மதுபான விற்பனை மூலம் மத்திய, மாநில அரசு களுக்குக் கிடைத்த வருவாய் 21,600 கோடி எனவும் தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் ஆய்வு தெரி விக்கிறது. எனவே அரசின் வருவாய்க்காக மது விற்பனையை அதிகரிக்கும் தமிழக அரசின்செயல் கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல்தான்.
 
இதை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூடி முழுமையான மது விலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்று புதிய அரசியல்... புதிய நம்பிக்கை கொள்கை ஆவணத்தில் கூறியிருக்கிறோம்.
 
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கோரி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் 1937 ஆம் ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை முழுமையான மது விலக்கு நடைமுறையில் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அண்டை மாநிலங்களிலும் மது விற்பனை நடை பெற்றுக் கொண்டுதான் இருந்தது. அதனால் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது அண்டை மாநிலத்தில் மதுவிலக்கு இல்லாததால் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
அரசு நினைத்தால் இப்போதும் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்தலாம். கள்ளச் சாராயத்தை ஒழிக்க நாங்கள் ஏற்கனவே சில யோசனைகளை தெரி வித்திருக்கிறோம். அந்த யோசனையை தமிழக அரசு செயல்படுத்தினால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும். ஆனால் தமிழக அரசு இதை செயல்படுத்த தயாராக இல்லை. இதனால் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டது.
 
வேலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களே மதுவிற்பனை செய்யும் அவலம் நடைபெறுகிறது. எனது சொந்த ஊரான கீழ்சிவிரியில் தாராளமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதைத்தடுக்கும்படி காவல்துறையிடம் புகார் மனு அளித்தபோதிலும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததால் 3 தலைமுறை இளைஞர்கள் மது என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தனர். 1971 ஆம் ஆண்டில் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். அதன்பிறகுதான் ஏராளமானோர் குடிக்க தொடங்கினர். இதனால் இளைஞர்களை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியவர் என்ற தீராப்பழி கருணாநிதி மீது விழுந்தது. அதன்பின் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசே மது விற்பனையை நடத்தும் என்று அறிவித்து செயல் படுத்தியதன் மூலம், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.
 
இந்த அவப்பெயரை துடைத்துக் கொள்வதற்காகவாவது அவர் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். ஏழை மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் இலவச திட்டங்களை செயல்படுத்துவதை விட மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஏழை மக்களுக்கு தேவையான பொருளாதார விடுதலையை பெற்றுத்தர முடியும் என்று மருத்துவர் ராமதாஸ் கூறினார்.  
 
காமராஜர், அண்ணா, சி. சுப்பிரமணியன், கக்கன், ஆர். வெங்கட்ராமன், ஜீவா போன்றோர் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்திய தமிழக சட்டமன்றம் கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை காற்றில் பறக்க விடப்பட்டு, கையை நீட்டியும், ஆக்ரோஷம் காட்டியும் பேசும் நிலை உருவாகி விட்டது. இப்படி நடந்து கொள்ள சட்டசபை சினிமா ஸ்டூடியோ அல்ல.
 
தமிழகத்தில் அணுஉலை அமைப்பதை பா.ம.க. வன்மையாகக் கண்டிக்கின்றது. அணு உலையினால் சொற்ப அளவிலான மின்சாரமே நமக்கு கிடைக்கின்றது. மின் தயாரிப்பிற்கு மாற்று வழிகளான அனல் மின்சாரம், சூரிய ஒளியின் மூலமும் மின் தயாரிப்பிற்கு ஏற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும்.  
 
முழுமையான மதுவிலக்கு கோரி, வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டத்திற்கான தேதியை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு விரைவில் கூடி முடிவு எடுக்கும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின்போது பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் பொன். கங்காதரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், சக்தி கமலாம்பாள், மாவட்டச் செயலாளர் பரந்தூர் து. சங்கர், மாவட்டத் தலைவர் குமாரசாமி, நகரச்செயலாளர் உமாபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.