நெல்லை, ஜன. 5-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க கோரி பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்கினார். ராமசுப்பு எம்.பி. வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. பற்றாக்குறையை போக்க அண்டை மாநிலத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். தமிழ்நாட்டில் ஓடும் அனைத்து நதியிலும் அணை கட்டி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதையும் காமராஜர் காலத்திலேயே கட்டி முடித்து விட்டோம்.
நிலக்கரி மின்சாரத்துக்கு நம்மிடம் உள்ள பழுப்பு நிலக்கரி போதவில்லை. எனவே மின்சாரம் வேண்டும் என்றால் அணு மின்சாரம் மிக மிக அவசியம் அடுத்த தலைமுறைக்கு அணு மின்சாரம் மிகவும் தேவை. இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக உபயோகப்படுத்தும் மின் அளவு 507 யூனிட், சீனாவில் 2500 யூனிட், அமெரிக்காவில் 11 ஆயிரம் யூனிட் அமெரிக்கா ஏன் வளர்ந்த நாடாக உள்ளது என்பதற்கு காரணமே இந்த மின்சாரம் தான்.
நாம் மின்சாரம் இல்லாமல் பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறோம். சீனா உபரி பட்ஜெட் போடுகிறது. சீனா நம்மை விட வளர்ச்சி பெற்று காணப்படுவதற்கு காரணம் மின்சாரம் தான். இந்த 5 ஆண்டு திட்டத்தில் நாம் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு இன்னும் 1 ஆண்டு தான் உள்ளது.
கூடங்குளத்தில் 1988-ல் தொடங்கப்பட்ட அணுமின் நிலையத்திற்கு ரூ. 14 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரணை நடக்கிறது. கணக்கு தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது மாநில அரசு ஒரு நிபுணர் குழு அமைத்துள்ளது. அந்த குழு கொடுக்கும் அறிக்கைப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் கூறியுள்ளார்கள். இதை வரவேற்கிறோம்.
தமிழக அரசின் நிபுணர் குழு தனது ஆய்வு அறிக்கையை விரைவில் அளிக்க வேண்டும். அந்த அறிக்கையையும் மத்திய அரசு நிபுணர்குழு தாக்கல் செய்த அறிக்கையையும் ஆராய்ந்து கூடங்குளம் அணு உலை மின்நிலையத்தை திறக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பேசியதாவது:-
அணுமின்நிலையம் வேண்டும் என்பது நமது அனைவரின் விருப்பம். கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டும் என்பவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால், எதிர்ப்பாளர்கள் எதிரே நிற்க முடியாது. நீங்கள் நினைத்தால் விரைவில் அணுமின் நிலையம் திறக்கப்படும். விவசாயம் வளர, தொழில்கள் வளர, கல்வி, சுகாதார வளர்ச்சிக்கு மின்சாரம் கண்டிப்பாக தேவை.
கூடங்குளம் பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு உறுதியாக செய்து தரும். எங்களை போராட்டம் நடத்தி பயமுறுத்த முடியாது. போராட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். அந்த பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காது. மத்திய அரசு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-
போராட்ட குழுவினர் தொடர்ந்து மீனவர்களிடம் தவறான தகவல்களை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் எப்படி வந்துள்ளது என்பது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. 6 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு ரூ.55 கோடி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த மத்திய அரசு மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அணுமின் நிலையத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.