பொள்ளாச்சி, பிப். 5-
பொள்ளாச்சி மகாத்மா காந்தி மண்டப வீதியை சேர்ந்தவர் மணிகண்டராஜ். இவர் பழனி, பொள்ளாச்சியில் கல் குவாரி நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமாக பொள்ளாச்சியில் காம்ப்ளக்ஸ் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் இந்த காம்ப்ளக்ஸை விற்பனை செய்ய முயன்றார். இதனை அறிந்த ஈரோடு பழைய பாளையம் இந்திரா நகரை சேர்ந்த ஸ்ரீதரன் என்கிற தேனி ஸ்ரீதர் என்கிற ரவிக்குமார் பொள்ளாச்சி வந்தார். அவர் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் மணிகண்டராஜை அணுகினார்.
தான் விசாகப்பட்டினத்தில் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும் காம்ப்ளக்ஸை விலைக்கு வாங்கி கொள்வதாகவும் தெரிவித்தார். அதன்படி மணிகண்டராஜை சென்னைக்கு வருமாறு அழைத்தார். அங்கு வைத்து காம்ப்ளக்ஸை விலைக்கு வாங்குவதற்கான டாக்குமெண்ட் செலவுக்கு பணம் தர வேண்டும் என கேட்டார்.
அதன்படி மணிகண்டராஜ் முதல் கட்டமாக ரூ. 3 லட்சமும் பின்னர் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரமும் கொடுத்தார். இந்த நிலையில் ஸ்ரீதரன் மோசடி நபர் என்பது மணிகண்டராஜூக்கு தெரிய வந்தது. இது குறித்து மணிகண்டராஜ் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மணிகண்டராஜ் உதவியுடன் ஸ்ரீதரனை பொள்ளாச்சிக்கு வரவழைத்து கைது செய்தனர். ஸ்ரீதரனிடம் விசாரித்த போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவர் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. தமிழகத்தில் மட்டும் அவர் மீது 50 -க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியிடம் டிரஸ்ட் நடத்துவதாக கூறி பணம் மோசடி செய்திருப்பதும் தமிழகம், ஆந்திரா தவிர கர்நாடகாவிலும் ஸ்ரீதரன் கைவரிசை காட்டி பல கோடி மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மோசடி செய்த பணத்தில் ஸ்ரீதரன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவர் சட்டசபை தேர்தலில் காங்கயம் தொகுதியிலும், பர்கூர் தொகுதியில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.