ஊட்டி,பிப். 3-
நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக எல்லையில் முதுமலை சரணாலயம் அமைந்துள்ளது. 321 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயத்தில் யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, மான் மற்றும் வன விலங்குகள் உள்ளன.
வனவிலங்குகளை கண்டு மகிழ சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் சரணாலயத்தை சுற்றி பார்ப்பதற்காக யானை சவாரி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றதை தொடர்ந்து யானை சவாரி நிறுத்தப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
48 நாட்கள் நடந்த யானைகளுக்கான புத்துணர்வு முனாம் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 10-ந்தேதி முதுமலை சரணாலயத்தில் யானை சவாரி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுற்றுலா பயணிகள் யானை சவாரியை உடனே தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்று முதுமலை சரணாயலத்தில் யானை சவாரி இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி இடைந்தனர். ஒரு யானையில் 4 பேர் பயணம் செய்ய 460 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.