எல்லா ஊர்களிலும் வெள்ளரிக்காய் இருந்தாலும் சாத்தூர் பகுதியில் கரிசல் மண்ணில் வறட்சி பகுதியில் விளையும் வெள்ளரிக்காய் மிகவும் சுவை உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சாத்தூர் பஸ் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் வெள்ளரிக்காய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சாத்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் வருடம் முழுவதும் வெள்ளரிக்காய் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. ஒரு பிடி வெள்ளரிக்காய் விதை ரூ.200. வெள்ளரிக்காயை பயிரிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
பங்குனி, சித்திரை, வைகாசியில் வெள்ளரிக்காய் சீசன் உட்சத்தில் கடுமையான கோடை காலத்தில் வெயிலினால் ஏற்படும் நாக்கு வறட்சி தடுக்க நீர்சத்து அதிகமுள்ள வெள்ளிளரிக்காய் அருமருந்தாக விளங்குகிறது என பயணிகள், பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுகுறித்து வெள்ளரிக்காய் மொத்தமாக விவசாயிகளிடம் வாங்கி கேரளா, நாகர்கோவில், நெல்லை, வள்ளியூர், திருச்சி, சென்னை, கோவை ஆகிய ஊர்களுக்கு அனுப்பும் வியாபாரி பழனிச்சாமி கூறியதாவது:-
தினமும் 100 முதல் 300 மூடை வெள்ளரிக்காய் பஸ்கள், ரெயில்கள் மூலம் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. வெயில் காலமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள் வெள்ளரிக்காய் அதிகமான விளைச்சல் இருக்கும்.
தமிழகத்தின் பல பகுதியில் வெள்ளரிக்காய் இருந்தாலும் சாத்தூரை சுற்றியுள்ள வன்னிமடை, நீராவிபட்டி, போத்தி ரெட்டிபட்டி, கலிங்கப்பட்டி, இருக்கன்குடி பகுதியில் கரிசல் காட்டில் கண்மாய் கரையோரமாக பயிரிடப்படும். இதன் சுவையே தனி. பயிரிடப்படுவதற்கு பெரிய செலவுகள் இல்லை. உரம் மற்றும் பூச்சி மருந்து தேவையில்லை. என்ற காரணத்தினால் இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளரிக்காய் கடுமையான வெயில் காலத்தில் நீர்சத்தினை உடலுக்கு கொடுக்கும். உடல் சூட்டை தணிக்கும் என்றும், முகம் பளபளப்பாக இருக்க பீயூட்டி பார்லரில் வெள்ளரிக்காயை உபயோகப்படுத்துகின்றனர். மேலும் சுகர், இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள் நொறுங்கு தீனியாக சாப்பிட உகந்தது.
அரசு தரப்பில் விவசாய வேளாண்மை துறை அதிகாரிகள் அதிக அளவில் பலவித விதை ரகங்களை வழங்கி இப்பகுதியில் வெள்ளரிக்காய் அதிக அளவில் விளைச்சலை பெருக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அரசு தரப்பிலிருந்து குளிர்சாதன கிடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.