Recommendations
Recent Activity
ரோட்டில் நின்று மது அருந்துவதால் இடையூறு: டாஸ்மாக் பார்கள் இரவு 10.30 மணி வரை நீடிப்பு
சென்னை, பிப். 4-
 
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது. 6,600 கடைகள் செயல்பட்டு வருகின்றன.   கடைகளுடன் பார்  வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. டெண்டர் மூலம் பார் நடத்த தனியாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
 
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. இரவு 10 மணிக்கு கடைகளும், பார்களும் கட்டாயம் மூடி விட வேண்டும் என்பது அரசின் உத்தரவாகும். அதற்கு மேல் கடைகளோ, பார்களோ செயல்பட அனுமதி இல்லை.   ஆனால் 10 மணிக்கு மது பாட்டில் வாங்குபவர்கள் பாரில் உட்கார்ந்து சாப்பிட முடியாத நிலை உள்ளது.
 
கடை மூடப்படும் நேரத்தில் வரும் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி விட்டு அவற்றை அருந்த முடியாமல் ரோட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். கடைக்கு வெளியே நின்று கொண்டு குடிப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ளது. கடைகளுக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்லும்போது மதுபாட்டிலுடன் சாலையோரம் நின்று மது குடிப்பதை பார்த்து முகம் சுழித்தனர்.
 
இதனால் மது பிரியர்கள் வசதிக்காக 30 நிமிடம் பார்களின் நேரத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இரவு 10 மணி வரை செயல்பட்ட பார்கள் இனி 10.30 மணி வரை இயங்க அரசு பரிசீலித்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இதற்கான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஆனால் பார்கள் மட்டும் கூடுதலாக அரைமணி நேரம் 10.30 மணி வரை செயல்படும். இதன் மூலம் மதுப்பிரியர்கள் பாருக்குள் அமர்ந்து சாப்பிடலாம். இனி ரோட்டு ஓரமோ கடைகள் முன்போ நின்று சாப்பிடத் தேவையில்லை. போலீசாரின் தேவையற்ற விசாரணைக்கு ஆளாக்கப்படுவதில்லை. மதுப்பிரியர்கள் வரவேற்றுள்ளனர்.