மத்தூர், பிப். 4-
மத்தூர் அருகே உள்ள மாடர்அள்ளியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேசன்(வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பெற்றோரிடம் அடிக்கடி வெங்கடேசன் சண்டைபோட்டு வந்தார். இதற்கிடையே பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்கடேசன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் உறவினர், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் வெங்கடேசனை கண்டு பிடிக்க முடிய வில்லை.
பின்னர் இது பற்றி முருகன் மத்தூர் போலீசில் தனது மகன் வெங்கடேசன் காணாதது பற்றி புகார் செய்தார். புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்கடேசனை தேடி வந்தனர். ஆனாலும் உடனடியாக அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையிலும் போலீசாருக்கு வெங்கடேசனை பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் வெங்கடேசன் தகவல் பற்றிய மர்மம் நீடித்து வந்தது.
இதற்கிடையே திருப்பூர் பனியன் கம்பெனியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் முருகனை தொடர்பு கொண்டார். அவர், உங்களது மகன் வெங்கடேசன் திருப்பூரில் இருக்கிறார். தனது பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக கூறினார். பின்னர் இது பற்றி முருகன் மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனை அடுத்து மத்தூர் போலீசார் அங்கு வெங்கடேசனை மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் வெங்கடேசனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்தது பற்றி வெங்கடேசன் கூறும்போது:-
பெற்றோர் தீட்டியதால் கோபித்து கொண்டு ஆத்திரத்தில் வீட்டை வீட்டு சென்றேன். திருப்பூர் சென்ற நான் எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் பஸ் நிலையத்தில் இருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவர் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு விசிட்டிங் கார்டில் உள்ள முகவரியில் வேலை இருப்பதாக கூறி சென்றார். அந்த முகவரிக்கு சென்றபோது தான் அது பனியன் கம்பெனி என்று தெரிய வந்தது.
அங்கு முதல் 3 மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். பின்னர் ரூ. 6ஆயிரம் கொடுத்தனர். நான் எதற்காக வீட்டை விட்டு வந்தேன் என்பதை உரிமையாளரிடம் கூறினேன். அவர் எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இப்போது மீண்டும் பெற்றோரிடம் இணைந்து விட்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் காணாமல் போன வெங்கடேன் கிடைத்ததால் பெற்றோர்கள், உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.