Recommendations
Recent Activity
முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
மெல்போர்ன், பிப். 4-

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (5-ந்தேதி) தொடங்குகிறது. மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. 3 நாடுகள் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும்.

ஒவ்வொரு அணியும் 8 ஆட்டத்தில் விளையாடும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி 3 ஆட்டமாக நடைபெறும். ஒரே அணி முதல் 2 இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்றால் 3-வது இறுதிப்போட்டி நடைபெறாது.

3 நாடுகள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நாளை உலக சாம்பியனான இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கடந்த 2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 3 நாடுகள் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. அதே மாதிரியான நிலை மீண்டும் உருவாகுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்டில் மோசமாக விளையாடி 'ஒயிட்வாஷ்' ஆன இந்திய அணி 3 நாடுகள் போட்டியில் கோப்பையை வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. டோனி தலைமையிலான இந்திய அணிக்கு 3 நாடுகள் போட்டி சவால் நிறைந்தது.

ஏனென்றால் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் சமபலம் வாய்ந்தவை. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 105 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 36 ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா 61 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 8 ஆட்டம் முடிவு இல்லை. நாளை பகல்- இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது.

ஸ்டார் கிரிக்கெட்டில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: டோனி (கேப்டன்), தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஜாகீர்கான், பிரவீண்குமார், வினய்குமார், ராகுல்சர்மா, உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி, இர்பான் பதான், பார்த்தீவ் பட்டேல்.

ஆஸ்திரேலியா: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), பாண்டிங், வார்னர், மைக்ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, மேத்யூ வாடே, கிறிஸ்டியன், மைக்கேல் மார்ஷ், ஹாரிஸ், ஸ்டார்க், மெக்காய், பெர்ட்லீ, டோகர்ட்டி, பீட்டர் பாரஸ்ட்.