ஜெயலலிதா, விஜயகாந்தை விமர்சித்து பேனர்கள்: திண்டிவனத்தில் அ.தி.மு.க.- தே.மு.தி.க.வினர் மோதல்- பதட்டம்-போலீஸ் குவிப்பு
Villupuram
சனிக்கிழமை,
பெப்ரவரி 04,
10:32 AM IST
0
கருத்துக்கள்
திண்டிவனம், பிப்.4-
திண்டிவனத்தில் ஜெயலலிதா, விஜயகாந்தை விமர்சித்து பேனர்கள் வைக்கப்பட்டதால் அ.தி.மு.க.-தே.மு.தி.க.வினர் இடையே மோதல் உருவானது. இதனால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி வெற்றிபெற்றது. அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 2 கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. அதன் பிறகு இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை திண்டிவனம் காந்திசிலை அருகே கார்ட்டூன் படத்துடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை விமர்சித்து அ.தி.மு.க. சார்பில் ஒரு பேனர் வைக்கப்பட்டது. அதனையறிந்த தே.மு.தி.க.வினர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து அதே பகுதியில் மற்றொரு பேனரை வைத்தனர்.
போட்டி போட்டு பேனர்கள் வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அப்போது நகரமன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் கும்பலாக வந்தனர். தே.மு.தி.க.வினர் வைத்திருந்த பேனரை அவர்கள் கிழித்து எறிந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தே.மு.தி.க. வினர் விரைந்து வந்தனர்.அவர்கள் அ.தி.மு.க. பேனரை சேதப்படுத்த முயற்சித்தனர். அதையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் உருவானது. இதில் பலர் காயமடைந்தனர். அவரை பாக்கம் பகுதியில் இருந்த தே.மு.தி.க. கொடிகம்பமும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில்திரண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க.-தே.மு.தி.க. தரப்பில் திண்டிவனம் போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி நடத்தினர். பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்பேரில் காந்திசிலை அருகே அ.தி.மு.க. தரப்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை நேற்று நள்ளிரவில் அந்த கட்சியினர் அகற்றினர். அ.தி.மு.க.-தே.மு.தி.க.வினர் மோதலால் திண்டிவனத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. எனவே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0
கருத்துக்கள்