Recommendations
Recent Activity
உலகின் சிறந்த வீரர் விருது பட்டியலில் ஜோகோவிச், மெஸ்சி
லண்டன், பிப்.4-
 
கவுரவமிக்க லாரெஸ் விருது 2000-ம் ஆண்டு முதல் உலகின் சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரர்-வீராங்கனை யார் என்பதை ஓட்டெடுப்பு மூலம் முடிவு செய்து விருது வழங்கும் விழா லண்டனில் நாளை மறுநாள் (6-ந் தேதி) நடக்கிறது.
 
இதில் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச், அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி உள்பட 6 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
 
அவர் கடந்த ஆண்டில் தான் விளையாடிய 76 ஆட்டங்களில் 6-ல் மட்டுமே தோல்வி கண்டார். எனவே ஜோகோவிச் விருதை தட்டிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. அவருக்கு அடுத்த வாய்ப்பில் கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி இருக்கிறார். அவர் விருது பெற்றால் உலக விருதை வெல்லும் முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெறுவார்.