நாமக்கல், பிப்.3-
சேலம் நகரில் நடந்த திருட்டு வழக்கில் ஈடுபட்ட சில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு உதவி கமிஷனர் உதயகுமார் தலைமையில் சேலம் மாநகர போலீசார் நாமக்கல் கடை வீதி சென்றனர்.
அங்கு ஒரு நகைக்கடையில் இருந்து 12 பவுன் செயினை வாஙட்கினார்கள். பின்னர் நேற்று மீண்டும் குற்றவாளியை அழைத்துச் சென்று இன்னொரு நகைக் கடையில் 18 பவுன் செயினை கேட்டனர். நகைக்கடை அதிபர் நகையை தர மறுத்துவிட்டார். போலீசாரின் செயலை கண்டித்து நகைக் கடைஅதிபர்கள் நேற்று கடைகளை அடைத்தனர். பின்னர் அவர்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து எஸ்.பியிடம் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
சேலம் போலீசாரை கண்டித்து இன்று 2-வது நாளாகவும் நகைக்கடை அதிபர்கள் கடைகளை அடைத்து இருந்தனர். மேலும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரனிடம் மனு கொடுக்கவும் முடிவு செய்து உள்ளனர்.
சேலம் போலீசாரின் தொல்லையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் மனுவில் குறிப்பிட உள்ளனர். மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்து உள்ளனர்.