கோவை, பிப். 3-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவன் முத்துப்பாண்டி (வயது 21). கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தான்.
வழக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.
போலீசார் அவனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் முத்துப்பாண்டி சிக்கவில்லை.
தலைமறைவாக வாழ்ந்து வந்த முத்துப்பாண்டி மீண்டும் தனது சுய ரூபத்தை காட்டத்தொடங்கினான். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டபோது வசமாக போலீசில் சிக்கினான்.
போலீசார் அவனை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். அப்போதுதான் அவன் புழல் சிறையில் இருந்து தப்பியவன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக ஒரு சப்- இன்ஸ்பெக்டரும், 2 போலீசாரும் முத்துப் பாண்டியை மேட்டுப்பாளையம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை முடிந்ததும் சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக கோவை காந்திபுரத்தில் உள்ள விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்கு முத்துப்பாண்டிய நேற்று இரவு 9 மணி அளவில் அழைத்து வந்தனர். பஸ் நிலையம் வந்த முத்துப்பாண்டி தன்னை அழைத்து வந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் “எனக்கு சிகரெட் வேண்டும்” என்று கேட்டான்”.
உயர் அதிகாரி என்றும் பாராமல் என்னிடமே சிகரெட் கேட்கிறாயா? ஏற்கனவே உன்னால் நாங்கள் ஏராள மான இன்னல்களை அனுப வித்து விட்டோம். ஒழுக்கமாக எங்களுடன் பஸ்சில் ஏறு என்று எச்சரித்ததாக தெரி கிறது.
அப்போது முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்து மற்றும் மார்பில் கீறினான். பாதி பிளேடை விழுங்கி விட்டதாக கூறிய அவன் பஸ் நிலையத்திலேயே மயங்கி விழுந்தான்.
இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் முத்துப்பாண் டியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காயங்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பின்னர் பிளேடை விழுங்கி யுள்ளானா என்பதை கண்டறிய ஸ்கேன் செய்து பார்த்தனர். வயிற்றில் பிளேடு எதுவும் இல்லை. காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படட நிலையில் போலீசார் இன்று முத்துப்பாண்டியை சென்னைக்கு அழைத்து சென்றனர்.
“மைனா” சினிமாவில் கைதியாக வரும் கதாநாயகன் போலீசாரை படாதபாடு படுத்துவான்.
அதை நினைவுபடுத்துவதாக இருந்தது கோவை பஸ் நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கைதியின் தற்கொலை முயற்சி காட்சிகள்.