லால்குடி, பிப். 3-
திருச்சி மாவட்டம் லால்குடி பரமசிவபுரம் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்தன மேரி. இவர் திருச்சி தென்னூரில் தங்கி அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
லால்குடியில் உள்ள வீட்டை அற்புதம் என்பவர் பாராமரித்து வருகிறார். இன்று காலை வீட்டு பக்கம் உள்ள செப்டிக் டேங்கில் துர்நாற்றம் கடுமையாக வீசியது.
உடனே துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கபட்டனர். அவர்கள் வந்து செப்டிக் டேங்கை சுத்தம் செய்தனர்.
அப்போது செப்டிக் டேங்கில் சேலை சுற்றிய நிலையில் பெண்ணின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டது. இதனை பார்த்ததும் அங்கு உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து லால்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் லால்குடி தாசில்தார் ரங்கராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலை மையிலான போலீசார் விரைந்தனர். எலும்பு கூட்டினை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப பட்டு உண்மை நிலவரம் கண்டறிய பட உள்ளது.
செப்டிக் டேங்கில் எலும்பு கூடாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்த நபர் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.