Recommendations
Recent Activity
காஞ்சீபுரத்தில் வாலிபர் கொலை: கொலை செய்வதாக மிரட்டியதால் கொன்றேன்: கைதான பெயிண்டர் வாக்குமூலம்
ஸ்ரீபெரும்புதூர், பிப். 3-
 
காஞ்சீபுரம் ஓரிக்கை அரசு நகரில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மகன் சந்திரன் (வயது 20), தொழிலாளி.   நேற்று மாலை 2 வாலிபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் முருகேசன் வீட்டிற்குள் புகுந்து சந்திரனை கொலை வெறியோடு தேடினர்.
 
அவர் இல்லாததால் முருகேசனை கையில் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். பலத்த காயம் அடைந்த அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்த்து விட்டு சந்திரன் வீட்டிற்கு வந்தார்.
 
அப்போது இருளில் மறைந்திருந்த அதே மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சந்திரனை வெட்டி கொன்று விட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  
 
விசாரணையில், சின்ன காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் நண்பருடன் சேர்ந்து சந்திரனை கொலை செய்தது தெரிய வந்தது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
போலீசில் செல்வம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-  
 
கடந்த 1-ந்தேதி நானும் எனது நண்பர்களும் ஒரிக்கை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினோம். அங்கு மது அருந்தி கொண்டிருந்த சந்திரன் எங்களிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, சந்திரன் என் கண்ணத்தில் ஒங்கி அடித்து விட்டு கொலை செய்து விடுவதாக சவால் விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.  
 
எனவே சந்திரனை கொலை செய்ய திட்டமிட் டேன். நேற்று சந்திரன் வீட்டிற்குள் நானும் எனது நண்பரும் கத்தியுடன் உள்ளே புகுந்தோம். ஆனால் அங்கு சந்திரன் இல்லாததால் அவனது தந்தையை லேசாக வெட்டி விட்டு தப்பினோம். பின்னர் சந்திரனுக்காக அவன் வீட்டு அருகே மறைந்து இருந்தோம். சந்திரன் வீட்டிற்குள் சென்றபோது, அவனை நாங்கள் வெட்டிக் கொன்று விட்டு தப்பி சென்றோம்.
 
இவ்வாறு அவன் கூறி உள்ளான்.  
 
கொலை செய்யப்பட்ட சந்திரன் மீது அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை அடித்துக்கொலை செய்த வழக்கு உள்ளது. ஜாமீனில் வெளியே வந்தவர் தற்போது குடிபோதை தகராறில் தீர்த்து கட்டப்பட்டுள்ளார்.