வார்ஷா, பிப். 3-
ஐரோப்பிய நாடுகளில் கொட்டும் கடும் பனிக்கு இதுவரை 160 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள ருமேனியா, போலந்து, இத்தாலி, உக்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்த ஆண்டு கடும் பனி நிலவுகிறது. மழை போன்று பனி கொட்டுகிறது. இப்பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் கடல் பகுதியில் தண்ணீர் ஐஸ் கட்டியாக உறைந்து விட்டது.
இதனால் பல நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போலந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிகழ்கிறது. அங்கு மைனஸ் 32 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இதனால் ஏற்பட்ட உறை பனிக்கு ஒரே நாளில் 29 பேர் பலியாகி விட்டனர்.
அதேபோன்று இத்தாலி, ருமேனியா நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ருமேனியாவில் கருங்கடல் பனிக்கட்டியாக உறைந்து விட்டது. இதனால் படகுகள், மீன்பிடி கப்பல்கள் அங்கு சிக்கி கிடக்கின்றன. உக்ரைன் நாடு தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு மைனஸ் 33 டிகிரியாக தட்பவெப்ப நிலை மாறி விட்டது.
இதனால் தண்ணீர் ஐஸ் கட்டியானதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. குளிரில் நடுங்கும் மக்கள், உணவு மற்றும் தங்குமிடம் இன்றி தவிக்கின்றனர். சுமார் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான கதகதப்பு மற்றும் சூடான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடும் பனிக்கு இங்கு மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவின் மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை 160 பேர் பலியாகி உள்ளனர். உடல் நலக்கோளாறு காரணமாக மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.