Recommendations
Recent Activity
வீட்டை இடித்த வழக்கு: சசிகலா சகோதரர் திவாகரன் கைது- திருச்சி சிறையில் அடைப்பு
திருச்சி, பிப்.3-
 
திருவாரூர்   மாவட்டம் நீடாமங்கலம்  அருகேயுள்ள ரிஷியூர்  கீழ தெருவை சேர்ந்த  பாலசுப்பிரமணியன் மனைவி கஸ்தூரி. திருவாரூர்    மாவட்ட  போலீஸ்  சூப்பிரண்டு சேவியர் தன்ராஜிடம் இவர் கடந்த மாதம் 21-ந்தேதி புகார் மனு அளித்தார். அதில் கடந்த 28.11.11-ல் மன்னார்குடியை  சேர்ந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன்  தூண்டுதலின் பேரில் ரிஷியூர் பஞ்சாயத்து தலைவர்   கிருஷ்ணமேனன், அ.தி.மு.க. கிளை செயலாளர் தமிழ்செல்வன்,  சிவசங்கரன், குணசேகரன்,   வைத்தியநாதன், கணேசன் ஆகியோர் ரிஷியூர்    கீழத்தெருவில் உள்ள   என்   வீட்டையும், எனது மாமனார் வீட்டையும் பொக்லைன்   எந்திரத்தால் இடித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன்,    எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கஸ்தூரி குறிப்பிட்டு இருந்தார்.
 
விசாரணை   நடத்திய போலீசார் திவாகரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடினார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.    திவாகரனுக்கு   சொந்தமான   செங்கமலத்தாயார்  மகளிர் கல்லூரி,  உள்ளிட்ட பல்வேறு   இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
 
திவாகரனை கைது செய்ய திருச்சி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து திவாகரன் உள்பட 7 பேர் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பொக்லைன் டிரைவர் சிவசங்கரன் உள்பட 2 பேரை போலீசார் கடந்த 26-ந்தேதி கைது செய்தனர்.
 
மற்ற 5 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே கஸ்தூரி கொடுத்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி திவாகரன் சார்பில்   அவரது  வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கடந்த 31-ந்தேதி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்   என்ற நிலை இருந்தது.
 
திவாகரன்   இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வதற்காக அவரது செல்போன் மற்றும் உறவினர்கள்   பயன் படுத்தும்  செல்போன்கள்  டவர் மூலம் தீவிரமாக கண் காணிக்கப்பட்டது. மேலும்  திவாகரனின் நெருங்கிய   நண்பர்  பட்டறை சிவானந்தம், தொழில் கூட்டாளி சித்தார்த்தன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், செங்கமல தாயார் கல்லூரி மேலாளர் பன்னீர், திவாகரன் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவன நிர்வாகி அசோகன், உதவியாளர் ரெங்கநாதன், செங்கமலத்தாயார்   கல்லூரி முதல்வர்  அமுதா  ஆகியோரிடம்  விசாரணை  நடத்தப்பட்டது.
 
இந்தநிலையில் தஞ்சை- திருச்சி  தேசிய  நெடுஞ்சாலையில் பால்பண்ணை என்ற  இடத்தில்  நேற்று நள்ளிரவு  12.15  மணிக்கு திவாகரன் கைதானார். காரில் தப்பி சென்ற அவரை துணை போலீஸ்   சூப்பிரண்டுகள் சீனிவாசன்   (பாபநாசம்), நவநீதகிருஷ்ணன் (சீர்காழி), நாகை ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.  மாணிக்கவாசகம் ஆகியோரது   தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதிகாலை 2.45 மணிக்கு   வலங்கைமான் சன்னதி  தெருவில் உள்ள நீடாமங்கலம் நீதிபதி செல்லப்பாண்டியன்  முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 
 
விசாரணைக்கு பிறகு வருகிற 16-ந் தேதி வரை  திவாகரனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட திவாகரன்   இன்று   அதிகாலை 5 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் 1-வது பிளாக்கில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நிலம் அபகரிப்பு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு   உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது சசிகலாவின் தம்பி திவாகரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.