Recommendations
Recent Activity
உலக ஸ்குவாஷ் தரவரிசையில் தீபிகா 14-வது இடத்தை பிடித்து சாதனை
புதுடெல்லி, பிப்.3-
 
கடந்த ஆண்டு மூன்று சர்வதேச ஸ்குவாஷ் பட்டங்களை வென்றதால் உலக பெண்கள் ஸ்குவாஷ் தரவரிசையில் 15-வது இடத்தை எட்டிய இந்திய இளம் நட்சத்திர வீராங்கனை தீபிகா பல்லிக்கல், தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறார். சென்னையை சேர்ந்த 20 வயதான தீபிகா சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்று வரை வந்தார்.
 
இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் நதாலி கிரின்ஹாமிடம் கோப்பையை நழுவ விட்டார். இருப்பினும் இறுதிப்போட்டி வரை நுழைந்ததால், நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசையில் அவர் ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது ஸ்குவாஷ் வாழ்க்கையில் சிறந்த தரநிலையாகும்.
 
தீபிகா, தற்போது சென்னையில் நடந்து வரும் 21 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, 4 இடங்கள் சரிந்து
40-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இன்னொரு தமிழக வீராங்கனை அனகா அலங்காமணி 9 இடங்கள் உயர்ந்து, 108-வது இடம் வகிக்கிறார். மலேசிய வீராங்கனை நிகோல் டேவிட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.