Recommendations
Recent Activity
குடவாசல் அருகே பயங்கரம்: ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் அடித்துக்கொலை; மைத்துனர் கைது
குடவாசல், பிப்.2-
 
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நெடுஞ்சேரி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் வேல்முருகன் (வயது 28). இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வேல்முருகனுக்கும், ராதாவிற்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
 
இதனால் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு ராதாவை வேல்முருகன் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில், ஏற்கனவே குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
 
தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ராதா நெடுஞ்சேரியில் உள்ள தனது தந்தை தங்கவேல் வீட்டில் வசித்து வருகிறார்.   இந்தநிலையில் நேற்றுமுன்தினம் குடிபோதையில் இருந்த வேல்முருகன், தங்கவேல் வீட்டிற்கு சென்று அங்கிருந்த தனது மனைவி ராதா மற்றும் குழந்தையை பார்க்க சென்றுள்ளார்.
 
அப்போது ராதா அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் ராதாவை தாக்கியதாக தெரிகிறது.
 
இதனை பார்த்துக் கொண்டிருந்த ராதாவின் சகோதரர் ராஜேஷ் (28) இருவரையும் சமாதானப் படுத்தியுள்ளார். இதனை ஏற்காத வேல்முருகன் தொடர்ந்து ராதாவை அடித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், வேல்முருகனை மண்வெட்டி கம்பால் பலமாக தாக்கினார்.
 
இதில் தலையில் பலத்த அடி விழுந்ததால் அதே இடத்தில் வேல்முருகன் துடிதுடித்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிச்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
 
மேலும் இறந்த வேல்முருகனின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.