Recommendations
Recent Activity
பெரம்பலூரில் துப்புரவு பணி குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு: குப்பை அள்ளவில்லை என்றால் போனில் தெரிவிக்கலாம்
பெரம்பலூர், பிப்.2-
 
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பள்ளிவாசல் தெரு, என்.எஸ்.பி சாலை, கம்பன் நகர், எளம்பலூர் சாலை, வடக்குமாதேவி சாலை, ஆத்தூர்சாலை, கல்யாண் நகர், மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், தீரன் நகர் ஆகிய பகுதிகளில் துப்புரவு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் தரேஸ் அஹமது திடீர் ஆய்வு மேற்கொண்டார் அந்தந்த பகுதிகளில் குப்பைகள் தினந்தோறும் எடுக்கப்படுகிறதா? என்பதை அந்தந்த பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
 
பெரம்பலூர் நகராட்சியில் குப்பைகளை சேகரிப்பதற்கு 36 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து கொட்டப்படுகிறது. இதனை பொது மக்கள் முழுமையாக பயன்படுத்தி குப்பைகளை தனித்தனியாக பிரித்து தொட்டியில் போட வேண்டும். தற்போது குப்பைகள் அள்ளும் பணி வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது.
 
குப்பைகள் அனைத்தும் நெடுவாசல் உரகிடங்கில் சேகரிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. பொது மக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் மட்டுமே போடவேண்டும். சாலை ஓரம் போடுவதால் காற்றில் பறந்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. குடியிருப்பு பகுதிகளில் காலியாக உள்ள இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குப்பைகளை போட்டால் நகராட்சியின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
பள்ளி, கல்லூரி அருகே குப்பைகளை போடாமல் அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டு நகராட்சியை குப்பை இல்லாத தூய்மையான நகராட்சியாக மாற்ற பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தங்கள் பகுதியில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்றால் நகராட்சி ஆணையரின் செல்போன் எண். 9750966205, துப்புரவு ஆய்வாளரின் செல்போன் எண்.9944226878 ஆகியவற்றுக்கு தெரியப்படுத்தலாம்.
 
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
 
பின்னர் கலெக்டர் குரும்பலூர், அரும்பாவூர் பேரூராட்சிகளில் தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்மன்றத்தலைவர் சி.ரமேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி கி.கண்ணதாசன், ஆகியோர் உடனிருந்தனர்.