Recommendations
Recent Activity
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இலங்கை பேராசிரியர் வேண்டுகோள்
ராமேசுவரம்,பிப்.2-
 
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சூசை ஆனந்தன், ரவீந்திரன் ஆகியோர் ராமேசுவரம் வந்தனர். அவர்கள் துறைமுக பகுதிக்கு சென்று மீனவர்களை சந்தித்து பேசினர். மேலும் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளையும் அவர்கள் பார்வையிட்டனர். அதன் பின்னர் பேராசிரியர் சூசை ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இலங்கை பல்கலைக்கழகத்தில் மீன்பிடி சம்பந்தமான படிப்பை மாணவர்களுக்கு கற்பித்து தரும் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தோம். அப்படியே ராமேசுவரம் மீன்பிடி தளத்தையும் மீனவர்களையும் சந்திப்பதற்காக வந்தோம். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பதால் தான் பிரச்சினையே ஏற்படுகிறது.
 
தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பதன் மூலம் மீன் குஞ்சுகள் உள்பட அனைத்து வகையான மீன்களின் இனப்பெருக்கமும் பாதிப்படைவதோடு மீன் வளமே அழியும் நிலை ஏற்படும்.
 
இந்திய மீனவர்கள் ரோலர் மடி, இழுவை வலைகளை நிறுத்தினால் மட்டுமே இருநாட்டு மீனவர்கள் மத்தியில் அமைதியான சுமுகமான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே இதை இந்திய மீனவர்கள் உணர வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அப்போது நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்யு தலைவர் அருளானந்தம், தமிழக கடலோர விசைப் படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா ஆகியோர் உடனிருந்தனர்.