Recommendations
Recent Activity
தவறான சிகிச்சையால் கோமா நிலை: இளம்பெண்ணின் மேல் சிகிச்சைக்கு முதல் கட்டமாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு, அரசுக்கு உத்தரவு
மதுரை, பிப். 2-
 
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் அருகே உள்ள செம்பொன்கரை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 45). கூலி தொழிலாளி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருந்ததாவது:-
 
“என் மனைவி ருக்மணி (34), தையல் வேலை செய்து வந்தாள். எனக்கு சுபாஷ் (15) என்ற மகனும், அமிர்தவர்ஷினி(13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 18.3.2011 அன்று என் மனைவியை நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக சேர்த்தேன். மறுநாளில் இருந்து என் மனைவி கோமா நிலையில் இருந்தார்.
 
இதுகுறித்து விசாரித்தபோது, ஆபரேசனின்போது என் மனைவிக்கு ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்தது தெரியவந்தது.   இதன் காரணமாக, என் மனைவியின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டது தெரியவந்தது.
 
தற்போது மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பல மாதங்கள் ஆகியும் என் மனைவி கோமா நிலையில் இருந்து மீளவில்லை. எனவே சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு மூலம் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும்.
 
கடுமையான பாதிப்பில் இருக்கும் எனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும், தவறு செய்த டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். என் மனைவியின் சிகிச்சைக்காக மதுரையில் இருக்கும் நானும், என் மனைவியின் பெற்றோரும் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே இடவசதி செய்து கொடுக்க மதுரை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.  
 
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, “மனுதாரர் கணேசனின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். கணேசன் தங்குவதற்கு வசதியாக மதுரை கலெக்டர் இடவசதி செய்து கொடுக்க வேண்டும். மதுரை பெரிய ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் ருக்மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்“ என்று கடந்த 11.7.2011 அன்று உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவின்படி கணேசனுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் அளிக்கப்பட்டது. மேலும் தங்குவதற்கும் இடவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தற்போது அவர் கோமா நிலையிலே இருந்து வருகிறார்.  
 
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.அழகுமணி, மலைக்கனி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
 
அப்போது அவர்கள் கூறியதாவது:-
 
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் திறமையான டாக்டர்கள் உள்ளனர். ஆனால் நவீன மருத்துவ கருவிகள் இல்லை. உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. இதனால் டாக்டர்களால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. மேலும் உயிர்காக்கும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்கி வரும்படி மனுதாரரை டாக்டர்கள் வற்புறுத்துகின்றனர்.
 
இதன்காரணமாக மிக அதிக விலை கொண்ட மருந்துகளை மனுதாரர் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து வருகிறார். இதனால் மனுதாரர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார். எனவே நவீன மருத்துவ கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள் கொண்ட மருத்துவமனையில் அரசு சார்பில் சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.  
 
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:-
 
மனுதாரரின் மனைவி ருக்மணிக்கு, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். சிகிச்சைக்காக முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை அரசு அளிக்க வேண்டும். அதன்பின்பு அடுத்தடுத்து ஏற்படும் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க வேண்டும். மனு தாரரும், அவரது குடும்பத்தினரும் வேலூரில் தங்கி இருக்க இடவசதியை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.