Recommendations
Recent Activity
ஜமுனா மரத்தூர் அருகே யானை மிதித்து விவசாயி பலி
கலசப்பாக்கம்,பிப்.2-

கலசப்பாக்கம் அடுத்த ஜமுனாமரத்தூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் 7 யானைகள் புகுந்தது. அவைகளை கிராம மக்கள் காட்டுக்குள் விரட்டியடித்தனர். ஆனால் யானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் மலை அடிவாரத்திலேயே சுற்றி திரிந்தன. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மலையடிவாரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு யானை கூட்டம் மேல் சோழங்குப்பம் ஈஸ்வரன் நகர் மலையடிவாரத்தில் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் 40 பேர் அங்கு முகாமிட்டு இருந்தனர்.

அப்போது யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து கரும்பு, மணிலா பயிர்களை நாசம் செய்தன. உடனே வனத்துறையினர், கிராமமக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டினர். பிளறியபடி யானைகள் ஓடின. அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் யானைகளை விரட்டி கொண்டு சென்றார்.

ஆவேசத்தில் இருந்த ஒரு யானை ஆறுமுகத்தை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. கீழே விழுந்த அவரை யானை காலால் மிதித்தது. ரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் துடித்தார். அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டு ஆறுமுகத்தை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் வேலூர் அடுக்கம் பாறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். யானைகள் 5 ஏக்கரில் இருந்த கரும்பு, மணிலா பயிர்களை நாசப்படுத்தின.