மன்னார்குடி, ஜன. 31-
தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டமான விலையில்லா கறவைப்பசு மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கிராமங்களில் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துப்பணிகள் இயக்குநரக சிறப்பு திட்டங்களுக்கான கூடுதல் இயக்குநர் டாக்டர் மு.பழனியப்பன் பார்வையிட்டு திட்ட செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மகிழஞ்சேரி மற்றும் செம்பியநல்லுர் கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பெற்ற 96 கறவைப்பசுக்களையும் தனித் தனியாக ஆய்வு செய்தார் அப்போது பயனாளிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் கறவை மாடு பராமரிப்பு குறித்த நுணுக்கங்களையும் எடுத்துரைத்தார் நன்றாக பராமரித்து வரும் பயனாளிகளுக்கு தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.
பயனாளிடகளிடம் ஆவின் மூலம் பால் கொள் முதல் நன்றாக நடைபெறுகிறதா எனவும் உரிய நேரத்தில் பாலுக்கான தொகை அளிக்கப்படுகிறதா? எனவும், ஆவின் மூலம் தீவனம் அளிக்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தனர். பயனாளிகளுக்கு கல்லுரி பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிப்பது குறித்தும் கேட்டறிந்தனர். விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற அறையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு 43 பயனாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆய்வின் போது அனைத்து பயனாளிகளும் தங்கள் ஆடுகள் மற்றும் அது ஈன்ற குட்டிகளையும் காண்பித்தனர் இங்கு 16 ஆடுகள் 18 குட்டிகளை ஈன்றுள்ளது மகிழச்சி அளிப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர் மேலும் இத்திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கிறது என தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகள் ஆடுகளை விற்கக்கூடாது எனவும் கறவைப் பசுக்களை 4 ஆண்டுகள் வரை விற்காமல் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 1470 பய னாளிகளுக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 5,880 வெள்ளாடுகளும், ரூ.1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான 296 விலையில்லா கறவைப் பசுக்களும் வழங்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் நாடாகுடி, மகிழஞ்சேரி, கடகம், ஆதிச்சமங்களம், மூலங்குடி, செம்பியநல்லு£ர் ஆகிய கிராமங்களில் வழங்கப்பட்ட 296 கறவைப்பசுக்கள் மூலம் தினமும் 2100 லிட்டர் பால் உற்பத்தி பெருகியுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது திருவாரூர் மண்டல இணை இயக்குநர் டாக்டர் சுப்பையன், உதவி இயக்குநர் டாக்டர் தமிழ்செல்வன், கால்நடை மருத்துவர் டாக்டர் ஹமீது அலி, கால்நடை உதவி மருத்துவர்கள் ஈஸ்வரன், தெய்வவிருதம், ஆறுமுகம் மகேந்திரன், செல்வம், விஜய் குமார், தனராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.