Recommendations
Recent Activity
சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது: ஆந்திரா என்ஜினீயர் கைது
ஆலந்தூர், ஜன. 31-
 
சென்னையில் இருந்து நேற்றிரவு 1.30 மணிக்கு ஜெர்மனி தலைநகர் பிராங்பர்ட் நகருக்கு லூப் தான்சா விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடசாமி பிரபாகரன்(35) என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் வந்தார்.  
 
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது பிரபாகரனின் நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தன்னிடம் எதுவும் இல்லை என்று மறுத்தார். என்றாலும், அதிகாரிகள் அவரது சூட்கேசை திறந்து சோதனையிட்டனர். சூட்கேசுக்குள் இருந்த சட்டைகளுக்குள் 20 ஆயிரம் யூரோ டாலர்களை பிரபாகரன் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது இந்திய பண மதிப்பில் ரூ.14 லட்சமாகும்.
 
அந்த பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.   இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் போது ரூ.5 லட்சம் வரையே கொண்டு செல்ல அனுமதி உண்டு. பிரபாகரன் ரூ.14 லட்சம் வரை வைத்திருந்ததால் அவரது பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். ரூ.14 லட்சம் மதிப்புள்ள யூரோ டாலர் குறித்து பிரபாகரன் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வருகிறார். எனவே, சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
 
இதேபோல், வேலூரைச் சேர்ந்த சர்தார் ஷெரீப் என்பவர் இன்று காலை துபாய் செல்ல வந்தார். அவரிடம் சோதனை நடத்திய போது 5200 அமெரிக்க டாலர்கள், 2500 யூரோ டாலர்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவருக்கு அபராதம் விதித்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை பயணம் செய்ய அனுமதித்தனர். கடந்த 5 நாட்களில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் நடந்த தீவிர சோதனைகள் மூலம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.