Recommendations
Recent Activity
48 நாட்கள் புத்துணர்வு முகாம் முடிந்து யானைகள் சொந்த ஊருக்கு புறப்பட்டன: சோகத்தில் பிரியா விடை
ஊட்டி, ஜன. 31-
 
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 14 - ந் தேதி தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 37 யானைகள் கலந்து கொண்டது.
 
முகாமில் யானைகளுக்கு 5 வகையான பசுந்தீவனங்களும், சூரணம், லேகியம், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. யானைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட யானைகள் தினமும் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு நடை பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு யானையும் மற்ற யானைகளுடன் நண்பர்களாக பழகி வந்தன.
 
8 நாட்கள் நடைபெற்ற யானைகள் முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.இதற்கான விழா நடைபெற்றது. இதையொட்டி யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. அனைத்து யானைகளும் அலங்கரிக்கப்பட்டு முகப்பட்டம் போடப்பட்டது. பின்னர் அவைகள் அனைத்தும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டன.
 
விழாவில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளர் தனபால், நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பழம் ஆகியவற்றை வழங்கினார்கள். முகாமை விட்டு பிரியும் சோகத்தில் பல யானைகள் இருந்தன. சில யானைகள் தன்னிடம் நண்பர் போல் பழகிய சில யானைகளின் துதிக்கையை பிடித்து சோகத்தை வெளிப்படுத்தின.
 
தோழிகளாக இருந்த பவானி கோவில் யானை வேதநாயகியும், காளையார் கோவில் யானை சொர்ணலட்சுமியும் கண்ணீர் மல்க காட்சி அளித்தன. யானை பாகன்களும் சோகமாக காணப்பட்டனர். 48நாட்கள் நண்பர்கள் போல் பழகினோம். தற்போது பிரிய வேண்டியது உள்ளதே என ஒரு யானைப் பாகன் வருத்தத்தோடு கூறினார்.
 
இன்று அதிகாலை முதல் யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 48 நாட்கள் மகிழ்ச்சியுடன் இருந்த யானைகள் பிரியா விடை பெற்று சென்றன.வழியில் யானைகளுக்கு தேவையான உணவு,குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. தலை குந்தா, குஞ்சப்பனை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் யானைகளுக்கு தேவையான உணவு,குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது.