Recommendations
Recent Activity
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்: நாமக்கல் ஆசிரியர் பயிற்சி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை
நாமக்கல், ஜன. 30-

மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை இயக்குனர் அறிவித்து உள்ளார்.

நாமக்கல் சந்தை பேட்டை புதூர் பகுதியில் நாமக்கல் மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கனகராஜ் என்பவர் முதல்வராக உள்ளார். இந்த கல்லூரியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். நேற்று விடுதி மாணவிகள் திடீரென கல்லூரி முதல்வர் கனகராஜை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதுப்பற்றி தெரியவந்ததும் நாமக்கல் தாசில்தார் புஷ்பவதி, டி.எஸ்.பி.சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விரைந்து சென்றனர். அப்போது மாணவிகள் அவர்களிடம் முதல்வர் கனகராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், ஆபாச மாக பேசுவதாகவும் விடைத்தாள்களை கிழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை கூறினர்.

எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றனர். இதையடுத்து ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் சோமசுந்தரம் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் மாணவிகள் தங்களது புகார்களை எழுத்து மூலமாக எழுதி கொடுத்தனர். பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறும் போது, மாணவிகள் எழுதி கொடுத்த மனுவை எங்களது இயக்குனரிடம் இன்று ஒப்படைக்க உள்ளேன்.

அதன் பிறகு உரிய விசாரணை நடத்தி முதல்வர் தவறு செய்து இருக்கும் பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் முதல்வர் கனகராஜ் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். அவரது பொறுப்பை துணை முதல்வர் மாரப்பன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவிகள் புகார் குறித்து முதல்வர் கனகராஜ் கூறியதாவது:-

சிலரின் தூண்டுதலின் பேரில் என் மீத தேவை இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்ட ஒரு மாணவி மீது நடவடிக்கை எடுத்தேன் அதுவும் இதற்கு ஒரு காரணம் ஆகும் என்றார். மோகனூர் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாணவிகள் விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.