Recommendations
Recent Activity
உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு பிறகு தி.மு.க.வில் மாற்றங்கள் வருமா?: மத்திய மந்திரி மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
மதுரை, ஜன. 30-
 
மத்திய மந்திரி மு.க.அழகிரி தனது 61-வது பிறந்தநாளை மதுரையில் இன்று கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
 
கேள்வி:- உங்கள் பிறந்தநாள் செய்தியாக தி.மு.க. வினருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
 
பதில்:- தலைவர் கலைஞர் தனது பிறந்த நாளில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடுவார். அதேபோல நானும் எனது பிறந்தநாளை ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறேன்.
 
இந்த பிறந்தநாளிலும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குகிறேன். அனைத்து தரப்பு மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று எனது பிறந்தநாள் செய்தியாக குறிப்பிட விரும்புகிறேன். அதில் தி.மு.க. தொண்டர்களும் அடங்குவார்கள்.
 
கே:- தமிழகத்தின் எதிர்காலம் எப்படி அமையும்?
 
ப:- போகபோக நீங்களே பார்ப்பீர்கள். பொறுத்திருந்து பாருங்கள். தமிழகத்தின் எதிர்காலம், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து தமிழகத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள்.  
 
கே:- வருகிற 3-ந்தேதி நடக்கும் தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் சில மாற்றங்கள் வரும் என கூறப்படுகிறதே?
 
ப:- அதுபற்றி எதுவும் எனக்கு தெரியாது.
 
கே:- தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி உள்ளது?
 
ப:- தமிழக மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு தேவையான நிறைய திட்டங்களை செய்துள்ளேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவிகள் செய்ய தி.மு.க. என்றும் தயங்கியது இல்லை. இதனை மனதில் வைத்துத் தான் எம்.பி. தேர்தலில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெற செய்தார்கள். எனவே தி.மு.க.வின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.  
 
கே:- தி.மு.க.வில் 3 முறை மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்கள் மாற்றும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறதே?
 
ப:- சில பத்திரிகைகள் தான் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் எனது மகனை இளைஞர் அணி பதவிக்கு கொண்டுவர இருப்பதாக எழுதுகிறார்கள். நானே பதவிக்கு ஆசைப்படவில்லை. அப்படி இருக்கும்போது நானா எனது மகனுக்கு பதவி கேட்க போகிறேன்.
 
கே:- அ.தி.மு.க. ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
 
ப:- ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போட்டு பழி வாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். நாங்கள் அந்த வழக்கை சட்டப்படி சந்தித்து வருகிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.