சென்னை, ஜன.28-
முகப்பேரில் கடத்தல்காரனிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் சந்தியா கூறியதாவது:-
என் குழந்தைகள் இருவரையும் பாட்டி வீட்டில் விட்டுச் சென்று இருந்தோம். நேற்று மாலையில் பென்சில் வாங்க பவதாரிணி தெருவில் உள்ள கடைக்கு சென்றார். வீடு திரும்பவில்லை என்று எனக்கு தகவல் சொன்னார்கள். பதட்டத்துடன் வீடு திரும்பினேன். இரவு முழுவதும் குழந்தையை தேடினோம். தூக்கமின்றி தவித்தேன்.
இன்று காலை 6.30 மணி அளவில் எங்கள் தெருமுனையில் பவதாரிணியை ஒருவன் ஆட்டோவின் இருந்து இறக்கி விட்டு தப்ப முயன்றான். அதைப் பார்த்ததும் டீக்கடை வைத்திருக்கும் மணிகண்டன் மற்றும் தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் விரட்டிச் சென்று அவனை பிடித்தனர்.
அந்தப்பாவி இரவு முழுவதும் என் குழந்தையை எங்கு வைத்து இருந்தானோ, உடல் முழுவதும் சித்ரவதைப்படுத்திய காயங்கள் இருக்கிறது. அதை நினைக்கையில் பெற்ற வயிறு பற்றி எரிகிறது. இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது. தூக்கில் போட வேண்டும். எந்த குழந்தைக்கும் இந்த கதி ஏற்படக்கூடாது.
இவ்வாறு ஆவேசத்துடன் கூறினார்.
கடத்தல்காரனை பிடித்த பெண்கள் பிரியா, சுமதி ஆகியோர் கூறியதாவது:-
குழந்தை பவதாரிணி எங்களிடம் நன்றாக சிரித்து விளையாடுவாள். அவள் கடத்தப்பட்டதை கேள்விப்பட்டதும் துடித்துப் போனோம். தெருவில் யாரும் இரவு முழுவதும் தூங்கவில்லை. குழந்தை எங்கிருப்பாளோ? என்ன ஆனாளோ? என்று பதட்டத்துடன் இருந்தோம்.
இன்று காலை தெருமுனையில் கடத்தல்காரன் ஆட்டோவில் வந்து குழந்தையை இறக்கி விட்டு தப்பி ஓட முயன்றதை பார்த்து விட்டோம். உடனே விரட்டிச் சென்று பக்கத்து தெருவில் டீக்கடைக்கார தம்பியுடன் சேர்ந்து பிடித்தோம். சிறுமியை அவன் சித்ரவதை செய்து இருக்கிறான். இவன்களை எல்லாம் சும்மா விடக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபோல் அப்பகுதி பெண்கள் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்தனர். குழந்தை பத்திரமாக திரும்பி வந்ததால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.