Recommendations
Recent Activity
கலவரத்தில் 2 பேர் பலி: ஏனாமில் 144 தடை உத்தரவு
புதுச்சேரி, ஜன. 28-
 
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏனாம் பிராந்தியம்  ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு ரீஜினல் செராமிக் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில்  ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு உலகத்தரம் வாய்ந்த டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
 
இந்த தொழிற்சாலையில் மொத்தம் 850 நிரந்தர ஊழியர்களும் 1200 தற்காலி ஊழியர்களும்  பணிபுரிந்து வருகிறார்கள். பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக 6 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
 
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட முரளிமோகன் என்ற தொழிலாளியும் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி தொழிலாளர்கள் தொழிற் சங்க வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு வந்த ஊழியர்களை  அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
 
தொழிற்சாலை வளாகத்தில் போராட்டம் நடத்த தடை இருப்பதால் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். ஏனாம் போலீசார் அங்கு வந்து தொழிற் சங்க தலைவர் முரளிமோகன் மற்றும் சில தொழிலாளர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் போது தொழிற்சங்க தலைவர் முரளி மோகன் நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார்.
 
அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். முரளிமோகன் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்ததாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
 
முரளிமோகன் மரண செய்தி பரவியதும் ஏராளமான தொழிலாளர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். அதே நேரத்தில் ஆவேசம் கொண்ட பல தொழிலாளர்கள் சிலர் தொழிற் சாலைக்குள் புகுந்து அதனை  சூறையாடினார்கள். தொழிற்சாலையின் எந்திரங்களை அடித்து நொறுக்கினார்கள். அங்கு சரக்குடன் நின்ற லாரிகளை தீ வைத்து கொளுத்தினார்கள்.
 
தொழிற்சாலை நிர்வாகத்துக்கு உட்பட்ட ரீஜினல் என்ஜினீயரிங் உள்பட 2 கல்லூரிகளையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். அங்கு நின்ற கல்லூரி மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமாக பஸ்களை அடித்து நொறுக்கினார்கள். தீ வைப்பில்  தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 20 லாரிகள், 10 பஸ்கள் தீக்கிரையானது.
 
அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.  போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை உதவி சேர்மன் சந்திரசேகர் வீட்டையும் தாக்கினர். வீட்டில் இருந்த சந்திரசேகரை சரமாரியாக தாக்கினார்கள். அதே போல் மக்கள் தொடர்பு அதிகாரி மூர்த்தியையும் அவர்கள் கடுமையாக தாக்கினார்கள்.
 
படுகாயம் அடைந்த 2 பேரும் காக்கிநாடா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர ஏனாமில் இருந்த 150 போலீசாரால் இயலவில்லை. இதையடுத்து அவர்கள் ஆந்திர போலீசை உதவிக்கு அழைத்தனர். காக்கிநாடா போலீசார், ஏனாம் போலீசாருடன் இணைந்து கலவரத்தை அடக்க முயன்றனர்.
 
போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நிலமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூட்டில் 10 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். தடியடியில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காக்கிநாடா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
 
கலவரத்துக்கிடையே தொழிலாளர்களும், பொதுமக்களும் தொழிற்சாலைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். தொழிற் சாலை இருந்த டைல்ஸ், மின்விசிறி, மேஜை-நாற்காலி, கம்ப்யூட்டர், ஏ.சி. மிஷின் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டனர்.
 
அதே போல் கல்லூரியில் உள்ள மேஜை- நாற்காலியையும் தூக்கிச் சென்றனர். இந்த கலவரத்தால் ஏனாமில் பெரும் பதட்டம் நிலவியது. இந்த கலவரத்தால் அங்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புதுவை ஐ.ஜி. சர்மா உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி. சுக்லா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேலு மற்றும் 50  ஐ.ஆர்.பி. போலீசார் ஏனாம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
 
அங்கு அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஏனாமில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. இதனை பொறுப்பு மண்டல நிர்வாகியான நகராட்சி அணையர் வெங்கட சுப்பிரமணியன் அமல்படுத்தியுள்ளார். ஏனாம் பகுதியில் இன்று கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
 
பள்ளிக் கூடங்கள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. பஸ்கள் ஓடவில்லை. நிசப்தமான சூழ்நிலை நிலவுகிறது. பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். கலவரத்தில் காயம் அடைந்தவர்களை  அமலா புரம் காங்கிரஸ் எம்.பி. ஹர்சகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் விசுவநாதன் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.