Recommendations
Recent Activity
பலத்த பாதுகாப்புடன் நாளை மணிப்பூர் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு
இம்பால், ஜன. 27-  
 
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவி காலம் முடிவடைவதைத் தொடந்து அங்கு தேர்தல் நடைபெறுகிறது.
 
இதில் 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி அங்கு கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
 
மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக ஓக்ராம் இபோபிசிங் இருந்து வருகிறார். மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால் காங்கிரசை எதிர்த்து அங்கு கம்யூனிஸ்டுகள் மற்றும் மாநில கட்சிகள் ஓர் அணியில் திரண்டுள்ளன. பாதீய ஜனதா மட்டும் தனித்து போட்டியிடுகிறது.  
 
இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மணிப்பூர் மாநிலம்தான் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது.
 
இந்த நிலையில் நேற்று குடியரசு தினவிழா இம்பாலில் நடந்தது. இதில் கவர்னர் குர்பச்சன் ஜகத் வரலாற்று சிறப்புமிக்க கங்களா கோட்டையில் கொடியேற்றினார். இதைக் கண்டித்து 7 தீவிரவாத அமைப்புகள் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை. கவர்னரின் கொடியேற்று விழாவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 
கவர்னர் அணி வகுப்பை பார்வையிட்டபோது காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள ஒரு இடத்தில் குண்டு வெடித்தது. உடனே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை.
 
இதேபோல் உக்குல் மாவட்டத்தில் கம்ஜோங் பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகனத்தில் சென்றபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியவில்லை.  
 
இதையடுத்து நாளை ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 60 தொகுதிகளில் மொத்தம் 279 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 17 லட்சத்து 40 ஆயிரத்து 576 வாக்காளர்கள் ஓட்டுப்போடுகிறார்கள். இவர்களில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 340 பேர் ஆண்கள், 8 லட்சத்து 82 ஆயிரத்து 236 பேர் பெண்கள்.  
 
உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக 4-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் உள்ளூர் திருவிழா காரணமாக ஓட்டுப்பதிவு தேதி மாற்றப்பட்டது.
 
2-வது கட்ட தேர்தல் 11-ந்தேதியும், 3-வது கட்ட தேர்தல் 15-ந்தேதியும், 4-வது கட்ட தேர்தல் 19-ந்தேதியும், 5-வது கட்ட தேர்தல் 23-ந் தேதியும், 6-வது கட்ட ஓட்டுப் பதிவு 28-ந்தேதியும், 7-வது கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 3-ந் தேதியும் நடைபெறுகிறது. மார்ச் 6-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.