Recommendations
Recent Activity
4-வது டெஸ்ட் போட்டி: தோல்வி பாதையில் இந்திய அணி
அடிலெய்ட், ஜன. 27-
 
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடி லெய்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 604 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. 
 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் சுருண்டது. வீராட்கோலி சதம் (116 ரன்) அடித்தார். சிடில் 5 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி பாலோ ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்யை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்து இருந்தது.
 
இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 382 ரன்கள் முன்னிலையில் கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. பாண்டிங்-கிளார்க் ஜோடியை உமேஷ்யாதவ் பிரித்தார். கிளார்க் 37 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார்.
 
அடுத்து வந்த மைக்ஹஸ்சி 15 ரன்னில் இஷாந்த்சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். மறுமுனையில் இருந்த பாண்டிங் சிறப்பாக விளையாடி அரை சதத்தை தொட்டார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து இருந்தது.
 
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 3 ஓவர் ஆடிய நிலையில் ஆஸ்திரேலியா ஆட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்தது. 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்திருந்தபோது அந்த அணி டிக்ளேர் செய்தது. பாண்டிங் 60 ரன்னிலும், ஹாடின் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் 332 ரன் மூலம் இந்தியாவுக்கு 500 ரன் இலக்காக நிர்ண யிக்கப்பட்டது. 500 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. வழக்கம்போல் இந்தியாவின் தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது.
 
இந்த முறை காம்பீர் எளிதில் ஆட்டம் இழந்தார். அவர் 3 ரன்னில் ஹாரிஸ் பந்தில் வெளி யேற்றப்பட்டார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷேவாக்குடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஷேவாக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்தில் 50 ரன் (11 பவுண்டரி) எடுத்தார். சிறப்பாக ஆடி வந்த ஷேவாக் 62 ரன்னில் லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். 55 பந்தில் 12 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 80 ஆக இருந்தது.
 
அதன்பிறகு டிராவிட் (25 ரன்), தெண்டுல்கர் (13) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். 110 ரன்னில் இந்தியா 4 விக்கெட்டை இழந்து மீண்டும் பரிதாப நிலையில் இருந்தது.
 
5-வது விக்கெட்டான லட்சுமண்-கோலி ஜோடி தோல்வியை தவிர்க்க சிறிது நேரம் நிலைத்து நின்றது. ஸ்கோர் 162 ஆக இருந்த போது லட்சுமண் 35 ரன்னில் அவுட் ஆனார்.  அதைத் தொடர்ந்து கோலி 22 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
 
இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. இந்திய அணி தோல்வி பாதையில் உள்ளது.   ஏற்கனவே இந்திய அணி 3 டெஸ்டிலும் தோற்று இருந்தது.
 
இந்த டெஸ்டில் தோல்வி அடைவதால் 0-4 என்ற மோசமான கணக்கில் தொடரை இழக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் தோற்றதை போலவே தற்போது ஆஸ்திரேலிய பயணத்தில் 4 டெஸ்டிலும் தோற்கிறது. வெளிநாட்டில் இந்திய அணி தொடர்ந்து 8-வது தோல்வியை தழுவுகிறது.