Recommendations
Recent Activity
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 245 காசுகளாக சரிவு: தினசரி விலை நிர்ணயம் செய்ய தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முடிவு
நாமக்கல், ஜன.26

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டையின் கொள்முதல் விலையை மேலும் 10 காசுகள் குறைக்க முடிவு செய்தது. எனவே முட்டை விலை 255 காசுகளில் இருந்து 245 காசுகளாக குறைந்து உள்ளது.

பிறமண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:

ஐதராபாத் - 245 , விஜயவாடா, தனுகு - 245, பார் வாலா - 265, சென்னை - 270, மைசூர் - 260, பெங்களூர் - 260, மும்பை - 275, டெல்லி - 290, கொல்கத்தா - 250.

முட்டைக்கோழி கிலோ ரூ.30-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.38-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.  

முட்டை விலை தொடர் சரிவை சந்தித்து வருவது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

வடக்கில் கடும் குளிர் நிலவி வந்தாலும், காய்கறிகள் விலை குறைந்து காணப்படுவதால், முட்டையின் நுகர்வு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் முட்டை விலை இந்தியா முழுவதும் குறைந்து வருகிறது.

மேலும் முட்டை உற்பத்தி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாக உள்ளதும் , தொடர் விலை குறைவிற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வருட காலமாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி) அறிவிக்கும் விலையில் இருந்து 20 பைசா குறைவாக பண்ணையாளர்களுக்கு விலை கிடைத்து வந்தது. கடந்த ஒரு மாத காலமாக முட்டை விலை இறக்கத்தால், பண்ணையாளர்களுக்கு என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையில் இருந்து, 25 முதல் 35 பைசா வரை குறைவாகவே கிடைத்து வருகிறது.

இதனால் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நுகர்வோருக்கும் முட்டை விலை குறையாமல் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க தற்காலிகமாக தற்போது முட்டை விலையை தினசரி சந்தை நிலைக்கு தக்கவாறு அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் முட்டை கிடைக்க வாய்ப்பு உள்ளதால், முட்டையின் நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் முட்டை விலை என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையில் இருந்து 20 பைசா மட்டுமே குறைத்து கிடைக்கும் வரை இந்த தினசரி விலை நிர்ணய நடைமுறை அமலில் இருக்கும்.

என்.இ.சி.சி. அறிக்கும் விலையில் இருந்து 20 பைசா மட்டுமே குறைத்து பண்ணையாளர்களுக்கு கிடைக்கிறது என்ற நிலை வந்துவிட்டதாக தோன்றும்போது, மீண்டும் வாரம் 3 முறை அதாவது, ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விலை நிர்ணயம் செய்யப்படும்.

ஐதராபாத், பார்வாலா, ஹோஸ்பேட், மும்பை, கொல்கத்தா போன்ற மண்டலங்களில் மார்க்கெட் நிலவரம் குறைந்து உள்ளதால், அந்த சந்தை நிலவரத்தை அனுசரித்து நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.