Recommendations
Recent Activity
டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி அறிக்கை
சென்னை, ஜன. 26-
 
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஒலக் கூர் காவல் நிலையத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீது, வன்னியர் கல்வி அறக்கட்டளை கல்லூரியில் பணியாற்றும் மாயகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 
உள்ளூர் அமைச்சர், போலீசாரை மிரட்டியதை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டாக்டர் ராமதாஸ் கடந்த 5 நாட்களாக சென்னையில் தொடங்கி வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
 
தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், யாரென்றே தெரியாத ஒருவரை தாக்கும்படி அவர் தூண்டியதாக புகார்தாரர் கூறியிருப்பதும், அதை வேதவாக்காக கருதி போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதும் விசித்திரமாகவும், நகைப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.
 
எனவே டாக்டர் ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை போலீசார் ரத்து செய்ய வேண்டும். பொய்யான புகாரை அளித்தவர் மீதும் அவரை தூண்டி விட்டவர்கள் மீதும் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.