வண்டலூர், ஜன. 26-
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (வயது 39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
ஆனால் சந்தானம் காதலை விடவில்லை. ஷாஜிதாவை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தவுசிக் நிஷாவை தனியாக சந்தித்து சந்தானம் பலமுறை பேசி உள்ளார். இருப்பினும் தவுசிக் நிஷா மனம் மாறாமல் தனது முடிவில் தெளிவாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தானம் கல்லூரி வளாகத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தவுசிக் நிஷாவிடம், ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு தவுசிக் நிஷா, வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இது சந்தானத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென ஆவேசமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் கழுத்து, நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தப் படியே தவுசிக் நிஷா வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் சந்தானம் ஈவு இரக்கமின்றி வீட்டுக்குள்ளேயே விரட்டிச்சென்று தவுசிக் நிஷாவை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார். பின்னர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு விரைந்து சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீடு முழுவதும் ரத்தக் கறையாக காட்சி அளித்தது. சந்தானம் பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
தவுசிக் நிஷாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சந்தானம் சப்-இன்ஸ்பெக்டரின் மகன். இவரது தந்தை பெயர் சந்திரபாபு. இவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இன்று காலையில் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.