மெல்போர்ன், ஜன.26-
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 604 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கிளார்க் (210 ரன்), முன்னாள் கேப்டன் பாண்டிங் (221 ரன்) ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர். அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து இருந்தது. காம்பீர் 30 ரன்னிலும், தெண்டுல்கர் 12 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (வியாழக்கிழமை) 3-வதுநாள் ஆட்டம் நடைபெற்றது.
543 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 8 விக் கெட்டுகள் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. வழக்கம்போல இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பீட்டர் சிடிலின் நேர்த்தியான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீனியர் வீரர்கள் திணறினார்கள்.
111 எடுப்பதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்தது. தெண்டுல்கர் 25 ரன் எடுத்திருந்த போது சிடில் பந்து வீச்சில் பாண்டிங்கிடம் கேட்ச் கெடுத்து ஆட்டம் இழந்தார். தெண்டுல்கர் தொடர்ந்து 100-வது சதத்தை தவற விட்டார்.
ஆஸ்திரேலிய மண்ணில் அவர் இதுவரை 7 இன்னிங்ஸ் விளையாடியும் சதம் அடிக்க முடியவில்லை. பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் அவர் தனது 100-வது சதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் போனது ஏமாற்றமே. காம்பீர் 34 ரன்னில் சிடில் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளான சீனியர் பேட்ஸ்மேன் லட்சுமண் இந்த டெஸ்டிலும் சொதப்பினார். 18 ரன்னில் அவர் நாதன் லயன் பந்தில் வெளியேறினார்.
6-வது விக்கெட்டான வீராட் கோக்லி- விர்த்திமான் சகா ஜோடி சரிவை தடுத்து நிதானத்துடன் ஆடியது. பெர்த் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வீராட் கோக்லி பொறுப்புடன் விளையாடினார். 100 பந்தில் 5 பவுண்டரியுடன் அவர் அரை சதத்தை தொட்டார். சகாவும் நிதானத்துடன் ஆடினார். 72.2-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது.
விர்த்திமான் சகா 35 ரன்னிலும், அஸ்வின் 5 ரன்னிலும், ஜாகீர்கான் ரன் ஏதுமின்றியும், இஷாந்த் சர்மா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து ஆடிய கோக்லி சதமடித்து ஆறுதல் தந்தார். கடைசியில் அவர் 116 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 332 ரன்கள் பின் தங்கியுள்ளது. பாலோ ஆன் கொடுக்காத ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது
இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டிங் 1 ரன்னுடனும், கிளார்க் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இதனால் இந்திய அணியை விட ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளது.