சென்னை, ஜன. 25-
அரசு ஆஸ்பத்திரிகளில் புதிதாக நர்சுகள் நியமனம் செய்வதில் புதிய நடை முறையை அரசு அமல்படுத்தியுள்ளது. இதுவரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடந்தது. தற்போது மருத்துவ பணியாளர்களுக்கு என்று தனியாக மருத்துவ தேர்வு வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் நர்சு பயிற்சி முடித்த வர்களுக்கு தகுதிதேர்வு நடத்தி பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்து உள்ளது.
அரசின் உத்தரவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும், அரசு வேலை கனவாக மாறிவிடும் என்று கருதி பயிற்சி நர்சு மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக சாலை மறியல், மனித சங்கலி போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.
ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று அரசின் இந்த ஒதுக்கீட்டில் இடம் பெற்று நர்சு பயிற்சி படித்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 23 நர்சு பயிற்சி பள்ளி உள்ளது. மொத்தம் 8 ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 3 1/2 வருட பட்டயபடிப்பை முடித்து 6 மாதம் பயிற்சி பெற வேண்டும். வருடத்துக்கு 2 ஆயிரம் பேர் நர்சு பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள்.
சென்னையில் அரசு நர்சு பயிற்சி பள்ளிகள் 4 உள்ளன. சென்னை மருத்துவ கல்லூரி நர்சு பள்ளி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், சேப்பாக்கம் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை, நர்சு பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. அரசின் உத்தரவால் தங்களது எதிர்காலம் பாதிக்கக்கூடும் என்று கருதி தமிழகம் முழுவதும் பயிற்சி நர்சு மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் நேற்று நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். விடுதிக்கு வந்த நர்சுகள் சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள். நேற்று மதியம் முதல் சாப்பிடாமல் இருந்த சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் இன்று காலையிலும் சாப்பிடாமல் இருப்பதால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
மாணவிகள் சாப்பிடாமல் இருப்பதால் சோர்வாக காணப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக விடுதி வார்டன் மற்றும் டாக்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மாணவிகள் மருத்துவ மனைக்கு பணிக்கு செல்லாமல் போராட்டம் செய்வதில் தீவிரமாக இருப்பதால் விடுதிக்குள் வைத்து பாதுகாப்பாக பூட்டியுள்ளனர்.
சாலை மறியலில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் விடுதி முன்பு போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை அருகிலும், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி நர்சு விடுதியிலும் பெண் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க மருத்துவமனை முதல்வர்கள், கண்காணிப்பாளர்கள், வார்டன்கள் தீவிரமாக மாணவிகளை கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை மாணவிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கையை எழுதி கொடுங்கள், அமைச்சரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்துவோம், பணிக்கு வாருங்கள் என்று அழைத்தார். ஆனால் மாணவிகள் அதற்கு சம்மதிக்க வில்லை.இது குறித்து டீன் கனகசபை கூறியதாவது:-
நர்சு பயிற்சி மாணவிகள் இன்று பயிற்சிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் இரவில் சாப்பிடவில்லை. அனைவரும் காலையில் சாப்பிடவில்லை. கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், அமைச்சரிடம் பேசி முடிவு செய்வோம் என்று கூறினோம். ஆனாலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதிலே குறியாக இருக்கிறார்கள்.
இதுபற்றி அமைச்சரிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும். ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடுவதால் தான் நாங்கள் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஆஸ்பத்திரிகளில் பயிற்சு நர்சுகள் இன்று பணிக்கு செல்லாததால் புற நோயாளிகள், உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே பணி செய்தனர்.