சங்கரன்கோவில், ஜன.25-
நெல்லை மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனவடலிசத்திரம் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர்பாண்டி மகன் பாரதிராஜா (வயது 32). இவர் கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் சொந்த ஊரான பெருமாள்பட்டிக்கு வந்த பாரதிராஜா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை போலீஸ் அதிகாரி மிரட்டலுக்கு பயந்து பாரதிராஜா சொந்த ஊருக்கு வந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிராஜா மனைவி சார்பில் வற்புறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பனவடலிசத்திரம் அருகே உள்ள பெருமாள்பட்டிக்கு வந்து பாரதிராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிறகு, வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டம் மேலநீலிதநல்லூர் பகுதியில் குடும்பம் நடத்துவதற்கு ஏற்ப வருமானம் ஈட்டும் வகையில் பெருந்தொழில் எதுவும் இல்லை. விவசாயத்தை மட்டுமே இந்தப் பகுதி மக்கள் நம்பி வாழ்கிறார்கள். இந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக பிழைப்புக்காக கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியில் மற்றொருவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து அதை ஓட்டி பாரதிராஜா பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
கடந்த 19-ந் தேதி கருமத்தம்பட்டியில் பாரதிராஜா ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் என்பவர் பாரதிராஜா கூடுதலாக 2 பேரை ஏற்றிச் சென்றதாக கூறி அவரை பிடித்து வழக்குப் பதிவு செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளார்.
அரசு பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு பயணிகளை கூடுதலாக ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அது குறித்து யார் வழக்குப்பதிவு செய்வது? அதற்காக கூடுதலாக பயணிகள் ஏற்றிச் செல்வது நியாயம் என்று நான் சொல்லவில்லை. கருமத்தம்பட்டியில் மற்ற ஆட்டோ டிரைவர்கள் அதிகமான அளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற போதும் அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யாமல் வேண்டும் என்றே பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவமானமாக பேசி அடித்து உதைத்துள்ளனர்.
20-ந் தேதி வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக ஆட்டோவை மீட்க முடியவில்லை. நீதிபதியிடமும், போலீசாரிடமும் கெஞ்சி கேட்டும் ஆட்டோவை மீட்க முடியவில்லை. அதனால் காவல்துறை அதிகாரியால் அவமானப் படுத்தப்பட்டதால் மனவேதனை அடைந்த பாரதிராஜா என்னும் மானமுள்ள இந்த இளைஞன் மானம் போய் விட்டது என்று தனது இன்னுயிரை மாய்த்துள்ளார். பாரதிராஜா சாவுக்கு காரணமானவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து பாரதிராஜா உயிரை மாய்த்துள்ளார். தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், பாரதிராஜா மனைவி இளம் வயதில் விதவையாகிவிட்டார். மற்றும் அவரது இரு பெண் குழந்தைகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது கண்ணீரை ஆறுதலாக்கி எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.