Recommendations
Recent Activity
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கழிவறைகளில் தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதி
சென்னை, ஜன.24-
 
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.05 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டைக்கு புறப்பட்டு செல்கிறது. நேற்று இரவு வழக்கம்போல ரெயில் புறப்பட்டது. சுமார் 1000 பயணிகள் பயணம் செய்தனர்.   2-ம் வகுப்பு படுக்கை பெட்டிகள் நிரம்பி இட மில்லாமல் சிலர் அலைந்து கொண்டிருந்தனர்.
 
படுப்பதற்கு முன்பதிவு செய்த பயணிகள் கழிவறைக்கு சென்றபோது அங்கு தண்ணீர் இல்லை என்பது தெரியவந்தது. ரெயில் புறப்பட்ட அடுத்த சில நிமிடத்திலேயே தண்ணீர் ஏன் இல்லை என்ற சந்தேகம் பயணிகளுக்கு ஏற்பட்டது. ஒரு பெட்டியில்தான் தண்ணீர் இல்லை, அடுத்த பெட்டி கழிவறையிலாவது தண்ணீர் இருக்கும் என்று சென்றனர். அதிலும் சுத்தமாக தண்ணீர் இல்லை.
 
கழிவறைகள் காய்ந்து கிடக்கிறது. எஸ்-6, எஸ்.-7, எஸ்-8 உள்ளிட்ட பெட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்ததால்தான் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ முடியவில்லை. முழுவதும் கழிவறைக்கு செல்ல முடியாமல் பயணம் செய்த அவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள்.
 
வயதானவர்கள், பெண்கள், சிறுகுழந்தைகள் கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தண்ணீர் உற்றாமல் சிறுநீரும், மலமும் கழித்தால் பெட்டியில் துர்நாற்றம் வீசியது. இரவில் இருந்து காலை வரை கழிவறைக்கு செல்ல முடியாமல் சிலர் கஷ்டப்பட்டனர். எப்படா ஊர் போய் சேரும் என்ற எதிர்பார்ப்புடன் பயணித்தனர்.
 
காலையில் பல் துலக்ககூட முடியாமல் கஷ்டப்பட்டனர்.   ரெயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்படுகிறோம். குழந்தைகளை வைத்துக் கொண்டு பாத்ரூம் போக முடியாமல் எப்படி பயணம் செய்ய முடியும். ரெயிலில் பயணம் செய்வதற்கு முக்கிய காரணமே பாத்ரூம் வசதி இருப்பதுதான்.
 
வயதானவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க கூடும். குழந்தைகளுடன் செல்வோர் ரெயிலில் பயணத்தைதான் அதிகம் விரும்புவார்கள். பயணிகளுக்கு வசதி குறையின்மை ஏற்படுத்தி பெரும், சிரமத்தை உண்டாக்கி விட்டனர் என்று ரெயில்வே துறையை கடுமையாக சாடினார்கள்.
 
நீண்டதூரம் செல்லக் கூடிய ரெயில்களில் தினமும் தண்ணீர் நிரப்புவது வழக்கம். பெட்டியை சுத்தம் செய்து பராமரித்து யார்டில் இருந்து எழும்பூர் நிலையத்திற்கு கொண்டு வரவேண்டும். ஆனால் அங்குள்ள ஊழியர்களின் அலட்சியத்தால் சில பெட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படவில்லை.
 
சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பொதிகை எக்ஸ்பிரஸ் பயணிகள் மனம் குமுறினர்.