Recommendations
Recent Activity
மீஞ்சூரில் சாலை விபத்தில் பலியான வாலிபர் பிணத்துடன் மறியல்
மீஞ்சூர், ஜன.21-
 
மீஞ்சூர் அருகே உள்ள பழவேற்காடு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (38). அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குரிய எரிவாயு நிரப்பும் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
 
திருமணமான இவருக்கு மைதிலி என்ற மனைவியும் கிஷோர் (6) என்ற மகனும் உள்ளனர். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார். ராமச்சந்திரா நகர் அருகே வரும் போது அடையாளம் தெரியாத லாரி அவர் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தது. இதில் வெங்கடேசன் தலை நசுங்கி பலியானார்.
 
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர். திருவொற்றிïர் நெடுஞ்சாலையில் திரண்டனர். பிணத்தை பார்த்து கதறி அழுதனர். சாலையில் அருகில் உள்ள கடைகளில் விபத்து குறித்து கேட்டனர். கடைக்காரர்கள் நாங்கள் பார்க்கவில்லை என பதில் கூறினர்.
 
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கடைகள் மீது கல்வீசி  தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல்  காட்சி அளித்தது. பின்னர் பிணத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில்  சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டது.
 
கல்வீச்சு சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் பொன்னேரி டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் வெங்கடேசன், அப்துல்காதர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர்.
 
பொன்னேரி தாசில்தார் அந்தோனி துணை வட்டாட்சியர் தமிழ்செல்வன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகசுந்தரம், வினாயகம், ஏழுமலை உள்பட பலர் மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
விபத்துக்குள்ளான வாகனத்தை உடனடியாக கண்டு பிடித்த பின்னரே உடலை எடுக்க வேண்டும் என  உறவினர்கள் கோரினர்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக  போலீசார் உறுதி அளித்தனர்.
 
இதையடுத்து வெங்கடேசன் உடலை போலீசார் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு பிரேத பரிசோத னைக்காக பொன்னேரி  அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தையும் அதனை ஓட்டி சென்ற லாரி டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்த போராட்டத்தால் அந்த சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.