Recommendations
Recent Activity
வீட்டு பாடம் படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளியை விட்டு மாயமான மாணவிகள்
திருச்சி, ஜன,21-

திருச்சி உறையூர் தெற்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் செந்தில்ராஜ். இவர் கண்டோன்மெண்ட் அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு மவுலிகீதா (11), லட்சணா (7) என 2 மகள்கள் உள்ளனர்.

மவுலிகீதா புத்தூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பும், லட்சணா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று பள்ளி சென்ற 2 பேரும் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. அதேபோன்று இவர்களுடன் பள்ளிக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மகள் பூவிழி (11), மோகன் மகள் சரோஜினி (11) ஆகியோரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் பள்ளியை முற்றகையிட்டனர். பள்ளி தாளாளர், ஆசிரியர்களிடம் மாணவிகள் குறித்து விசாரித்தனர். மாணவிகளை மீட்டுத்தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு திருச்சி மேற்கு தொகுதி பரஞ்சோதி எம்.எல்.ஏ., உதவி போலீஸ் கமிஷனர் வீராசாமி, உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மாயமான மாணவிகள் எங்கே சென்றனர் என சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாயமான மாணவிகள் 4 பேரும் திருச்சி அருகே உள்ள புள்ளம்பாடியில் அழுதுகொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று மாணவிகளை மீட்டு அழைத்து வந்தனர். மாணவிகளை பார்த்ததும் பெற்றோர் கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டனர். 4 மாணவிகளும் மாயமானது ஏன் என போலீசார் விசாரித்துபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. மாணவி மவுலிகீதா வீட்டு பாடம் படிக்காமல் இருந்ததால் பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் கோபம் அடைந்த மவுலிகீதா புள்ளம்பாடியில் உள்ள தாத்தா வீட்டுக்கு செல்ல திட்டமிட்டார். தனது தங்கை மற்றும் வகுப்பு தோழிகளையும் அழைத்தார். பூவிழி, சரோஜினி ஆகியோர் மவுலி கீதாவுடன் புள்ளம்பாடி செல்ல சம்மதித்தனர். மற்ற மாணவிகள் வர மறுத்துவிட்டனர்.

மவுலிகீதா தனது மாமாவிடம் ஏற்கனவே ரூ.20 வாங்கி வைத்திருந்தார். அதன் மூலம் சத்திரம் பஸ்நிலையம் சென்றுள்ளனர். பிறகு புள்ளம்பாடி சென்றனர். புள்ளம்பாடியில் இறங்கிய பிறகு தாத்தா வீட்டுக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் மவுலிகீதாவும் மற்றவர்களும் ரோட்டில் அழுதுகொண்டே இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அப்பகுதி கவுன்சிலர் திருநாவுக்கரசு மாணவிகள் பற்றி விசாரித்தார்.

பிறகு அங்கு உள்ள விடுதி ஒன்றின் நிர்வாகி அருட்தந்தை தங்கசாமி, ஆரோக்கியமேரி ஆகியோரிடம் மாணவிகளை ஒப்படைத்தார். அதன்பிறகு லால்குடி டி.எஸ்.பி. சுப்பிரமணியன், கள்ளக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ் ஆகியோர் வந்தனர்.

மவுலி கீதாவிடம் அவரது உறவினர் செல்போன் நம்பரை வாங்கி பேசி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவிகள் மீட்கப்பட் டனர். 4 மாணவிகளையும் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை களை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறினர்.