Recommendations
Recent Activity
சல்மான்ருஷ்டி உயிருக்கு சிமி தீவிரவாதிகளால் ஆபத்து: மத்திய அரசு எச்சரிக்கை
புதுடெல்லி, ஜன. 19-
ராஜஸ்தானில் நாளை ஜெய்ப்பூர் இலக்கிய விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.   சல்மான் ருஷ்டி 1988-ல் ஒரு நாவல் எழுதியதால் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களிடம் கோபம் ஏற்படுத்தியது. அவரை கொல்ல பல இஸ்லாமிய அமைப்புகள் உத்தர விட்டன. இதனால் அவர் வெளிநாடுகளில் பலத்த பாதுகாப்புடன் சென்று வருகிறார்.
 
இந்த நிலையில் அவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சல்மான்ருஷ்டி விசாவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனால் அவர் வருகை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 
 
சல்மான்ருஷ்டி மீது செருப்பு வீசினால் ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்று மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்றாலும் சல்மான் ருஷ்டி டெல்லிக்கு ரகசியமாக வருவார் என்று தெரிகிறது. சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு அளிக்க ராஜஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ருஷ்டி தங்கும் இடம், மற்றும் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 
 
 இந்த நிலையில் சல்மான் ருஷ்டி உயிருக்கு சிமி இயக்கத்தை சேர்ந்தவர்களால் திடீர் ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிமி இயக்க தலைவர்களின் நடவடிக்கையை கண்காணித்த பிறகே இந்த உத்தரவை உள்துறை வெளியிட்டுள்ளது.
 
எனவே சல்மான்ருஷ்டி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் ருஷ்டி சமீப காலங்களில் பல தடவை இந்தியா வந்து சென்றுள்ளார். திடீரென இந்த தடவை அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.